×

கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

கோவை: கோவை மாநகராட்சியில் 3,600 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மாநகரில் குப்பைகள் அகற்றிட தூய்மை பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதற்காக ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.  இதைத்தொடர்ந்து, தூய்மை பணியில் தனியார் மயத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் பணிக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தூய்மை பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் சங்கத்தினருடன் மாநகராட்சி அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், எந்த தீர்வும் எட்டப்படவில்லை.இந்நிலையில், நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்க மாநில செயலாளர் தமிழ்நாடு செல்வம் கூறியதாவது: இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கோவை லேபர் யூனியன், கோவை மாவட்ட ஜீவா முனிசிபல் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கம், தமிழ்நாடு தூய்மைக் காவலர் பொது தொழிலாளர் சங்கம், கோவை மாவட்ட அண்ணா சுகாதார பணியாளர் சங்கம், தமிழ்நாடு நம்மவர் தூய்மைப் பணியாளர் தொழிற் சங்கம், கோவை மாவட்ட டாக்டர் அம்பேத்கர் மக்கள் தூய்மைப் பணியாளர் சங்கம் ஆகியவை பங்கேற்கின்றன. எங்கள் போராட்டத்தால் குப்பைகள் அகற்றுதல், டெங்கு ஒழிப்புப் பணி உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் இருந்து தினமும் சுமார் 1000 டன் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மாநகரில் சுமார் 500 டன் குப்பைகள் தேங்கியுள்ளன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மை பணியாளர்கள் உள்ளனர். குப்பைகள் தேங்காதவாறு அவர்கள் மூலம் குப்பைகள் அகற்றும் பணி தொய்வு இல்லாமல் நடைபெற்று வருகிறது’’ என்றார்….

The post கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Corporation ,Coimbatore ,
× RELATED வடக்கு மண்டலம் பகுதியில் புதிய...