ரஷித் சுழலில் அடங்கியது ஆர்சிபி சன்ரைசர்சுக்கு 150 ரன் இலக்கு

சென்னை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 150 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் சந்தீப் ஷர்மா, முகமது நபிக்கு பதிலாக நதீம், ஹோல்டர் இடம் பெற்றனர். ஆர்சிபி அணியில் பத்திதார் நீக்கப்பட்டு படிக்கல் சேர்க்கப்பட்டார்.

கேப்டன் கோஹ்லி, படிக்கல் இருவரும் ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். படிக்கல் 11 ரன் எடுத்து குமார் வேகத்தில் நதீம் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த ஷாபாஸ் அகமது 14 ரன் எடுத்து நதீம் பந்துவீச்சில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பெங்களூர் அணி 47 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், கோஹ்லி  மேக்ஸ்வெல் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் பொறுமையாக விளையாடி 44 ரன் சேர்த்தது. கோஹ்லி 33 ரன் எடுத்து (29 பந்து, 4 பவுண்டரி) ஹோல்டர் வேகத்தில் ஷங்கரிடம் பிடிபட்டார். அடுத்து வந்த அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் 5 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து ரஷித் சுழலில் வார்னரிடம் பிடிபட, சன்ரைசர்ஸ் கை ஓங்கியது. வாஷிங்டன் 8 ரன் எடுத்து ரஷித் பந்துவீச்சில் மணிஷ் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

கிறிஸ்டியன் 1 ரன், ஜேமிசன் 12 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய மேக்ஸ்வெல் 38 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 59 ரன் (41 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் அவுட்டாக, ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன் குவித்தது. ஹர்ஷல் படேல் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் ஹோல்டர் 3 விக்கெட், ரஷித் கான் 2 விக்கெட் (4-0-18-2), குமார், நதீம், நடராஜன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது.

Related Stories: