×

சபரிமலை கோயிலில் தரிசனம் 9 வயது சிறுமியை கூட அனுமதிக்காதது ஏன்?... தேவசம் போர்டு விளக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலையில்  ஐயப்பனை தரிசனம் செய்ய 9 வயது சிறுமிக்கு அனுமதி அளிக்கக்கோரி அவரது தந்தை  கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கேரள மாநிலம்,  கோட்டயம் அருகே உள்ள வைக்கம் பகுதியை சேர்ந்தவர் அபிராஜ். இவர் கேரள  உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சபரிமலை ஐயப்பன்  கோயில் ஆசாரப்படி 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் தரிசனம் செய்யக்  கூடாது. எனது மகள் நந்திதாவுக்கு தற்போது 9 வயது ஆகிறது. எனவே, வரும் 17ம்  தேதி எனது மகளையும் அழைத்து கொண்டு சபரிமலை செல்வதற்காக ஆன்லைனில் முன்பதிவு  செய்ய சென்றேன்.

ஆனால், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் முன்பதிவு  செய்ய முடியவில்லை. அடுத்த ஆண்டு எனது மகளுக்கு 10 வயது  ஆகிவிடும். அதன்பின், 40 ஆண்டுகளுக்கு பின்னர் தான் ஐயப்பனை தரிசிக்க  முடியும். எனவே, எனது மகள் இந்தாண்டு தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும்,’ என  ேகாரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் சுரேஷ் குமார், பாபு அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. தேவசம்போர்டு சார்பில்  ஆஜரான வக்கீல், ‘‘கொரோனா நிபந்தனைகள் இருப்பதால் 10 வயதுக்கு உள்பட்ட  குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் சபரிமலை செல்ல  கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான், 9 வயது சிறுமிக்கு தரிசனம்  செய்ய அனுமதி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,’’ என்றார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

200 பேருக்கு மட்டுமே அனுமதி
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கொரோனா   நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. திருவிழா நடக்கும் கோயில்களில்  200  பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது, அன்னதானம் நடத்தக் கூடாது என தடை  விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருச்சூர்  பூரம் விழாவிலும்  பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளன. திருச்சூர்  தேக்கின்காடு மைதானத்தில் கண்காட்சி  நடக்கிறது. இதை பார்ப்பதற்கு பாஸ்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Tags : Sabarimala temple , Darshan at Sabarimala temple even a 9 year old girl Why not allow? ... Angel Board Description
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு