லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீதான புகார்களை முடிக்க திட்டமா? டிஜிபி பொறுப்புகளை கவனிக்கும் ஜூனியர் டிஐஜி

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீதான புகார்களை ரகசியமாக முடிப்பதற்கு நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக டிஜிபி அந்தஸ்திலான பணியின் பொறுப்புகள் ஜூனியர் டிஐஜியிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீதான லஞ்சம், ஊழல், சொத்து குவிப்பு புகார்களை விசாரிக்கும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த துறையில் டிஜிபி அல்லது கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் அதிகாரிகள் இயக்குநராக நியமிக்கப்படுவார்கள்.

ஐஜிக்களை இணை இயக்குநர்களாகவும், டிஐஜிக்களை துணை இயக்குநர்களாகவும் நியமிப்பது வழக்கம். சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு அடுத்தபடியாக இந்த துறைதான் முக்கியமான துறையாக போலீசில் கருதப்படும். தமிழக அரசில் உள்ள மற்ற துறைகளைப்போல போலீசில் இருப்பவர்களையும் லஞ்ச குற்றச்சாட்டில் சிக்குபவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்யலாம். மேலும் அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தாலும், அதையும் இந்த துறை அதிகாரிள் விசாரிப்பார்கள். இதனால் மற்ற துறை அதிகாரிகள் மட்டுமல்லாது அமைச்சர்களும், இந்த துறையை கண்டு பயந்துதான் இருப்பார்கள்.

இதனால் ஆளும் அரசுகள் சட்டம் ஒழுங்கு டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனருக்கு அடுத்தபடியாக லஞ்ச ஒழிப்புத்துறையில் இயக்குநர் பதவியை முக்கியமாக கருதும். இதனால் தங்களுக்கு வேண்டியவர்களைத்தான் இந்த பிரிவில் நியமிப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ராஜேந்திரபாலாஜி மற்றும் தி.நகர் எம்எல்ஏ சத்யா உள்ளிட்ட பல்வேறு எம்எல்ஏக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வந்தனர். பலர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. ஒரு சிலர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த துறையில் ஆளும் கட்சிக்கு ஆதரவான அதிகாரி என்று கூறப்பட்ட டிஜிபி விஜயகுமார், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவர் ஓய்வுபெற்ற பிறகு, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு ராஜேஷ்தாஸ் நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சட்டம் ஒழுங்கு பதவியில் நீடித்தார். ஆனால், ராஜேஷ்தாஸ் பாலியல் குற்றச்சாட்டால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக இருந்த ஜெயந்த் முரளி, மீண்டும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவி காலியாக இருந்தது. அதேநேரத்தில் இணை இயக்குநராக இருந்த முருகனும், சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் குற்றச்சாட்டால் பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவருக்குப் பதில் புதிய ஐஜி நியமிக்கப்படாமல் இருந்தது. அவரது பொறுப்பை, லஞ்ச ஒழிப்புத்துறையில் துணை இயக்குநராக உள்ள டிஐஜி ராதிகா கவனித்து வந்தார். தற்போது இயக்குநர் நியமிக்கப்படாததால், அதற்கான பொறுப்புகளையும் ராதிகாவே கவனித்து வருகிறார். இவர் டிஐஜியாக இருந்தாலும் மிகவும் ஜூனியர். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி பரிந்துறையால் நியமிக்கப்பட்டவர்.

மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். சத்தியமூர்த்திக்கு நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது. இதனால் மேற்கு மண்டல அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை காப்பதற்காகவே ராதிகா நியமிக்கப்பட்டார் என்று அப்போது போலீசில் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு ஏற்றார்போல தலைமையிட டிஐஜியாக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் பல அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று விசாரணை முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைமையிட டிஐஜியாக உள்ள ராதிகாதான் பாலமாக இருந்தார் என்றும் கூறப்பட்டது.

இந்தநிலையில், இயக்குநர், இணை இயக்குநர் இல்லாமல் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குநர் தலைமையில் இயங்கி வருகிறது. அவர்களது பொறுப்புகளை டிஐஜி ராதிகாதான் கவனித்து வருகிறார். இப்போது ஆட்சி மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் புதிய அரசு பதவி ஏற்பதற்குள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீதான குற்றச்சாட்டுகளை, ஒன்றும் இல்லாமல் ஆக்குவதற்கான பணிகள் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர், இணை இயக்குநர் போடாமல் அரசு இருப்பது, இதை உறுதிப்படுத்துவதுபோல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், தேர்தல் ஆணைய உத்தரவு இருப்பதால் நியமிக்கவில்லை என்று கூறலாம். ஆனால் சட்டம் ஒழுங்கு பணியில் நியமிக்கத்தான் தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவை. தேர்தல் பணி அல்லாத பொறுப்புகளில் நியமிக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவையில்லை. தகவல் மட்டுமே தெரிவித்தால் போதுமானது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறையில் நடைபெறும் நடவடிக்கைகள் மர்மமாகவே உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. புதிய அரசு பதவி ஏற்பதற்குள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீதான குற்றச்சாட்டுகளை, ஒன்றும் இல்லாமல் ஆக்குவதற்கான பணிகள் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories:

>