நகராட்சிகளுக்கு சேவை வரி செலுத்தக்கோரிய மத்திய கலால் துறை நோட்டீஸ் ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விருதாசலம், கடலூர் நகராட்சிகளுக்குச் சொந்தமான கடைகள், திருமண மண்டபங்கள், இறைச்சிக்கூடங்கள், வாகன நிறுத்துமிடங்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் ஈட்டிய வருவாய்க்கு 2012 முதல் 2017 வரையிலான தணிக்கை ஆண்டுகளில், சேவை வரி செலுத்தும்மாறு சேவை வரித்துறை 4 நோட்டீஸ்களை அனுப்பியது. இதை எதிர்த்து விருத்தாச்சலம், கடலூர் நகராட்சிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு மற்றும் அரசு இயந்திரங்கள் வழங்கும் சேவைகளுக்கு  நிதிகள் தொடர்பான சட்டத்தில் விதிவிலக்கு உள்ளது. எனவே இந்த நோட்டீஸ்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை தரப்பில், சம்பந்தப்பட்ட நகராட்சிகளுக்கு சேவை வரித்துறை நோட்டீஸ் மட்டுமே அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீஸை எதிர்த்து, நகராட்சிகள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால் நகராட்சிகள் நேரடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதால், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அரசின் நிதிகள் தொடர்பான சட்டத்தில், உள்ளாட்சி அமைப்பான நகராட்சிகள் அரசின் அங்கமே. சேவை வரி சட்டத்தில், அரசுக்குச் சொந்தமான அசையா சொத்துக்களை வாடகைக்கு விடும்போது அதற்கு சேவை வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரம் நிதிகள் தொடர்பான சட்டத்தில், இதற்கு விதிவிலக்கு உள்ளது. எனவே, 2 நகராட்சிகளுக்கு மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை அனுப்பிய 4 நோட்டீஸ்கள் ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Related Stories:

>