கொரோனா 2வது அலை ஏறுமுகமாக இருந்தாலும் தமிழகத்தில் தற்போது ஊரடங்கு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை:  சென்னை, வளசரவாக்கத்தில் சின்ன போரூர் நகர்புற சமூக சுகாதாரத்துறை மையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நேற்று முன்தினம் 6,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய சவாலான விஷயமே, கொரோனாவின் 2வது அலை அனைத்து மாநிலங்களிலும் ஏறுமுகமாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் கொரோனா தொற்று அதிகபட்சமாக 1.85 லட்சம் பாதிவாகி உள்ளது. இதேநிலை நீடித்தால் தமிழகத்திலும் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 49,985 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில், சென்னையில் மட்டும் 18,673 பேர்.

தமிழகத்தில் 32,198 ஆக்சிஜன் படுக்கைகள்,  ஐசியூ படுக்கைகள் 7,047 தயார் நிலையில் உள்ளது. அத்துடன் 28,925 படுக்கைகள் கொண்ட கோவிட் கேர் சென்டர் உள்ளது. படுக்கை வசதிகளை அதிகரிக்க முதல்வர் கூறியுள்ளார். அதன்படி 81,871 படுக்கைகள் தயாராக உள்ளது. இதில் மருத்துவமனையில் 52,946 படுக்கைகள், கோவிட் கேர் சென்டரில் 28,095 படுக்கைகள் உள்ளன. தமிழகத்தில் தற்போது 6,517 வென்டிலேட்டர் தயாராக உள்ளது. 1,45,872 ரெம்டெசிவர் மருந்து கையிருப்பில் உள்ளது.மேலும் முகக்கவசம் போடாத 2.39 லட்சம் பேர் மீது வழக்கு பதிந்து ₹5.07 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு 54 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசி வந்தது. அதில் 40 லட்சத்து 99 ஆயிரம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி திருவிழா நடக்கிறது. அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, இன்னும் 2 வாரங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை. எனவே, தேவையில்லாத பயணத்தை மக்கள் தவிர்க்க வேண்டும். மகாராஷ்டிரா போன்று 15 நாட்கள் ஊரடங்கு போடும் நிலை, தற்போது தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கு அந்தந்த பகுதிளில் உள்ள அமைப்புகளை அழைத்து பேச இருக்கிறோம்.

தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா நோய் தொற்று வந்தால் கூட பாதிப்பு குறைவாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். தமிழகத்தில் 4,795 தடுப்பூசி மையங்களை திறந்துள்ளோம். அதில் 3,864 அரசு மையம், 920 தனியார் மையம். கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா என்பது அரசின் கொள்கை முடிவு. அதை முதல்வர், வருவாய் பேரிடத்துறை எடுக்க வேண்டியது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மற்ற 2 தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.  

* கொரோன தடுப்பு மருந்து 11% வீணாகிறது

தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார். பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: பொதுமக்கள் முடிந்த அளவிற்கு பொது இடங்களில் கூட்டங்கள் சேர்வதை தவிர்க்கலாம். வீட்டில் இருந்து பணி செய்யக் கூடியவர்கள் வீட்டில் இருந்தே பணிகளை செய்யலாம். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இறப்பு அதிகமாக இருக்கிறது. அதை குறைக்க வேண்டும். தடுப்பூசி 4 பேர் கோவேக்சின் போடும் போது 6 டோஸ் வீணாகிறது.

50 டோஸ் போட வேண்டிய இடத்தில் 42 பேர் போடும் போது 8 டோஸ் வீணாகிறது. அதன்படி தமிழகத்தில் 11 சதவீதம் வீணாகிறது. தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று உள்ளது. அப்போது என்ன முடிவுகள் எடுக்கப்பட்டு முதல்வரின் கவனத்துக்கு கொண்டு போய் முடிவு எடுக்கப்படும். சித்த மருத்துவத்தில் கபசுரகுடிநீர், பூர்னசந்திரோதயா, ஆடா தொடை ஆகியவை சித்த மருத்துவர்கள் மூலம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதைப்போன்று யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் நல்ல பலன் கிடைத்தது. எனவே அனைத்தும் இந்திய மருத்துவத்தையும் சமமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories:

>