×

மனுநீதி நாள் முகாமில் ஆட்சியர் முன் பெண்கள் தீக்குளிக்க முயற்சி

வேப்பூர், மார்ச் 25:  வேப்பூர் அடுத்த கோ.கொத்தனூரில் மனு நீதிநாள் முகாம் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் கோட்டாட்சியர் லூர்து சாமி முன்னிலையில் நடந்தது. இதில் இலவச மனைபட்டா, முழு புலம் பட்டா மாற்றம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகை, வட்ட வழங்கல் துறை சார்பில் குடும்ப அட்டை, வேளாண்மை துறை  நலத்திட்ட உதவிகள் என 226 பயனாளிகளுக்கு ரூ. 67லட்சத்து 14ஆயிரத்து 921  மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  வேப்பூர் வட்டாட்சியர் அரங்கநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், ஜெயக்குமாரி, மாவட்ட கவுன்சிலர் சக்திவினாயகம், ஒன்றிய தலைவர் செல்வி, ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமாரி ரகுநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மனுநீதிநாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டிருந்தபோது அங்கிருந்த 2 பெண்கள்   தூய்மை பணியாளர் சீருடையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் முன் திடீரென மண்ணெண்ணெய் தங்களின் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்- இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவர்களை தடுத்து காப்பாற்றினர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் விசாரித்த போது, வேப்பூர் அடுத்த வரம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி ராதிகா(31), தங்கபிரகாசம் மனைவி மகேஸ்வரி (30), என்பதும் இவர்கள் வரம்பனூர் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வந்ததுள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன் தூய்மை பணியாளர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தங்களை மீண்டும் பணியில் சேர்க்க கோரி ஏற்கனவே இரண்டு முறை மாவட்ட ஆட்சியரிடம்  அவர்கள் மனு அளித்திருந்தனர். இதையடுத்து இருவருக்கும் மீண்டும் பணி வழங்க கோரி நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். ஆனால் இரண்டு பேருக்கும் இதுவரை பணி வழங்காததால் மனமுடைந்த இருவரும் நேற்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது….

The post மனுநீதி நாள் முகாமில் ஆட்சியர் முன் பெண்கள் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Human Rights Day ,Veypur ,Manu ,Neethi ,Day ,Kothanur ,Collector ,Balasubramaniam Kotaksiar Lourdes ,
× RELATED பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது பைக்...