×

தண்டலம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

திருப்போரூர், மார்ச் 26: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய தண்டலம் ஊராட்சியில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மக்களிடையே குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் மு.ஆனந்தன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் சித்ரா தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆலிஸ் வரவேற்றார். செயல்பாட்டாளர் நதியா தொகுத்து வழங்கினார். குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பின் தலைவர் தேவன்பு குழந்தைகள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களையும், குழந்தைகள் நலனுக்கான செயல்படுத்தப்படும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்தும் பேசினார்.  இக்கூட்டத்தில் பேசிய ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் குழந்தைகள் மேம்பாட்டிற்காக ஊராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள், திட்டங்கள், பொது இடங்களிலும் கட்டிடங்களிலும் செய்யப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை எடுத்துக் கூறி குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என உறுதி அளித்தார். குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழுவினர் தங்கள் பகுதிகளில் பள்ளி இடை நிற்றலை தவிர்த்தல், குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல், குழந்தை திருமணத்தை தடை செய்தல், வன்கொடுமைகளில் இருந்து காத்தல் போன்றவை குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அனைவரையும் தேர்வெழுத வைக்க தேவையான வழிகாட்டுதலை செய்ய உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மதிச்செல்வன், நீடு அறக்கட்டளை இயக்குனர் இராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். முடிவில் தண்டலம் ஊராட்சி செயலாளர் கோபால் நன்றி கூறினார்….

The post தண்டலம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thandalam panchayat ,Tiruporur ,Children's Rights Protection Committee ,Panchayat ,Tandalam Panchayat ,Tiruporur Union ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ