×

சிபிஎஸ்இ தேர்வுகள் அறிவித்த தேதியில் நடைபெறுமா? ஒத்திவைக்கப்படுமா?: மத்திய கல்வியமைச்சர், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!!!

டெல்லி: சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து மத்திய கல்வியமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கொரோனா காலத்தில் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயங்கி வருகின்றன. தொடர்ந்து, சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்து இருந்தார்.

அதன்படி, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு மே 4ம் தேதி தேர்வுகள் தொடங்கி ஜூன் 15ம் தேதி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 7 வரையும், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 15 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அட்டவணையில் சில மாற்றங்களை செய்து சில பாடங்களுக்கான தேர்வுகளை வேறு தேதிக்கு ஒத்தி வைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது.

இதற்கிடையே, நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், குழந்தைகளை தேர்வு எழுத வைப்பது அவர்களுக்கு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூட்டம் கூடுகிற தேர்வு மையங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சாத்தியம் இல்லை என்பதால் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய கல்வித்துறை செயலாளர், மற்றும் பிற முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை அறிவித்த தேதியில் நடத்த முடியுமா? இல்லை ஒத்திவைக்க வேண்டுமா? என்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் ஆலோசனைக்குப்பின் சிபிஎஸ்இ தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : CBSE ,Federal Academic Minister ,Modi , Will the CBSE exams be held on the announced date? Will it be postponed ?: Prime Minister Modi's consultation with the Union Minister of Education and other officials. !!!
× RELATED வரும் கல்வியாண்டில் 3 முதல் 6ம்...