×

கொரோனா அதிகரித்துள்ள போதிலும் பைன் பாரஸ்ட் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம்

ஊட்டி:  கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், ஊட்டி பைன் பாரஸ்ட் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. ஊட்டி - கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது. இந்த அணையின் ஒரு பகுதியில் பைன் மரங்கள் நிறைந்த வனபகுதி உள்ளது. வனங்களுக்கு நடுவே உள்ள பைன் பாரஸ்ட் பகுதியை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். பைன் பாரஸ்ட் நடுவே புகைப்படம் எடுத்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். வனத்துறையின் சூழல் மேம்பாட்டு குழுவின் மூலம் பைன்பாரஸ்ட் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல வசதியாக கற்கள் மற்றும் மரங்களை கொண்டு நடைபாதை அமைக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா ஊரடங்கு சமயத்தில் மூடப்பட்ட இப்பகுதி கடந்த டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது.

ஊரடங்கு நேரத்தில் சூழல் மேம்பாட்டு குழுவினர் பருவமழையின் போது கீழே விழுந்த மரங்களை துண்டு, துண்டாக வெட்டி இருக்கைகளாக வடிவமைத்து உள்ளனர். இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை துவங்கியுள்ள போதும் ஊட்டிக்கு கணிசமான அளவு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பைன் பாரஸ்ட் பகுதியும் களைகட்டியுள்ளது. மரங்களால் ஆன இருக்கைளில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். காமராஜர் அணையின் கரையோரத்தில் குதிரை சவாரி செய்து வருகின்றனர். இதனிைடயே பைன் பாரஸ்ட் பகுதியில் குதிரை சவாரி செய்யும் உள்ளூர் மக்கள் மற்றும் அங்கு வர கூடிய பெரும்பாலான சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிவதில்லை. இதன் காரணமாக கொரோனா பரவ கூடிய அபாயம் நீடிக்கிறது. எனவே பைன் பாரஸ்ட் பகுதியில் முக கவசம் அணிவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



Tags : Pine Forest ,Corona , Corona, increased, pine forest, crowd
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...