கூடலூர் அருகே காட்டு யானைகளை விரட்ட அழைத்து வரப்பட்ட கும்கிகள் இடமாற்றம்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவாலா அட்டி மற்றும் பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட சரகம் நான்கு பகுதிகளில் வீடுகள் மற்றும் தொழிலாளர் குடியிருப்புகளை இரண்டு காட்டு யானைகள் சேதப்படுத்தின. இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினரின் தொடர் கண்காணிப்பால் யானைகள் வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த காட்டு யானைகளை விரட்ட கைதகொல்லி பகுதியில் கடந்த 3 நாட்களாக இரண்டு கும்கி யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.ஆனால், காட்டு யாைனகள் கடந்த இரு நாட்களாக தேவாலா பகுதியில் உள்ள ரவுஸ்டன் முல்ல தனியார் தேயிலை தோட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

இதை விரட்ட கைதகொல்லி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கும்கிகளை, காட்டு யானைகள் நடமாட்டம் பகுதிக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்து நேற்று தனியார் தோட்ட பகுதிக்கு கும்கிகள் கொண்டு செல்லப்பட்டன.  

தேவாலா அட்டி பகுதியில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த இரண்டு காட்டு யானைகளும் வனத்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அந்த யானைகள் இரவு நேரத்தில் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக தனியார் தோட்ட வனப்பகுதிக்கு கும்கி யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேவாலா வனச்சரகர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>