×

ஒரே பகுதியில் 8 பேருக்கு கொரோனா வல்லன்குமாரவிளை ஹவுசிங்போர்டு காலனியில் 20 வீடுகள் சீல்வைப்பு

நாகர்கோவில்:  நாகர்கோவில் மாநகர பகுதியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  வல்லன்குமாரவிளை ஹவுசிங்போர்டு காலனி பகுதியில் அமைந்துள்ள 5 வீட்டில் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து 5 வீடுகளில் உள்ள மற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. இந்நிலையில் மேலும்  கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் அந்த பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

  நேற்று காலை மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித், மாநகர்நல அதிகாரி டாக்டர் கின்சால் மற்றும் சுகாதார அலுவலர்கள்  அந்த பகுதியை பார்வையிட்டனர்.  பின்னர்  சுற்றி அமைந்துள்ள 20 வீடுகள் காவல்துறை உதவியுடன் பேரிகார்டு கொண்டு அடைக்கப்பட்டது. மற்ற 15 வீடுகளில் உள்ளவர்களின் சளிமாதிரிகள் எடுக்கப்பட்டது. மேலும் வீடுகள், தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு உண்டான 5 வீடுகளையும் கம்பு மற்றும் வலையால் கட்டி யாரும் உள்ளே செல்லாதவாறு மாநகராட்சி ஊழியர்கள்  அடைத்தனர்.  கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள பகுதியில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு காவல்துறை போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் யாரும் வெளியே சென்றால் தகவல் கொடுக்கலாம் என தெரிவித்தனர். இதுபோல் பீச்ரோடு பகுதியில் இயங்கி வரும் ஒரு ஓட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த ஓட்டல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ஓட்டல் அடைக்கப்பட்டது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று 88 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து மொத்தம் குமரியில் 17850 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் கண்டக்டருக்கு கொரோனா
கோவையில் இருந்து நேற்று காலை நாகர்கோவிலுக்கு விரைவு போக்குவரத்து கழக பஸ்  வந்தது. இந்த பஸ்சில் தூத்துக்குடியை சேர்ந்த கண்டக்டர் மற்றும் டிரைவர்  இருந்தனர். கண்டக்டருக்கு அல்சர் பிரச்னை இருந்துள்ளது. இது தொடர்பாக  எண்டோஸ்கோப்பி சிகிச்சை பெறுவதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை வடசேரி பஸ் நிலையத்தை நெருங்கியபோது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து கண்டக்டருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த கண்டக்டர் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் பஸ் வடசேரி பஸ் நிலையத்தை வந்தடைந்தது. கண்டக்டர் பஸ்சை விட்டு இறங்கி பணப்பெட்டியை ஊழியரிடம் ஒப்படைத்துவிட்டு உடனடியாகத் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். அரசு விரைவுப் போக்குவரத்து கழக பஸ் கண்டக்டருக்கு கொரோனா தொற்று இருந்த தகவல் மாநகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டது.  அரசு பஸ் மீனாட்சிபுரம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது . அங்கு அரசு பஸ் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.

கொரோனா பாதித்த பெண் ஓட்டம்
வல்லன்குமாரவிளை ஹவுசிங் போர்டு காலனியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 8 பேரில் 52 வயது மதிக்கதக்க ஒரு பெண் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். நேற்று மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுக்கும்போது அந்த பெண் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி அதிகாரிகள் இது தொடர்பாக கோட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.

கொரோனாவிற்கு 3 பேர் பலி
நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த 85 வயது முதியவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். அவர் நேற்று மதியம் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதுபோல் நெல்லை மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த 52 வயது பெண் கடந்த 7ம் தேதி ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார்.  நேற்று காலை அந்த பெண் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதுபோல் சென்னை பட்டிணம்பாக்கத்தை சேர்ந்த 62 வயது பொறியாளர் கொரோனா தொற்றால் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைப்பெற்று வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 340 பேர் இறந்துள்ளனர்.

Tags : Corona Valungumarawili Housingford , In the same area, 8 people, corona, 20 houses sealed
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை