எவ்வித அறிகுறிகளும் இன்றி கொரோனா பரவல்: முதியவர்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தல்.!!!

சென்னை: எவ்வித அறிகுறிகளும் இன்றி கொரோனா தொற்று பரவி வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காய்ச்சல், தலைவரி அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். எவ்வித அறிகுறிகளும் இன்றி கொரோனா தொற்று பரவி வருகிறது என்றார்.

லேசான அறிகுறிகள் இருந்தாலே உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் பரிசோதிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை  பரிசோதிக்க 12,000 கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை பரிசோதிப்பதன் மூலம் கொரோனா தொற்றை எளிதில் கண்டறியலாம்.

தினமும் 400 இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் மட்டுமின்றி எந்த வகையான உடல் பிரச்சனை இருந்தாலும் முகாமுக்கு வந்து பரிசோதித்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மூச்சுத்திணறல்  போன்ற அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்.

லேசான அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறலாம். 72 லட்சம் பேரில் இதுவரை 9 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடி சென்று  கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தினார்.

நுகர்திறன் குறைவது, வயிற்றுப்போக்கு, மிக அதிகமான உடல் சோர்வு ஆகியவையும் கொரேனா அறிகுறிகள்தான். காய்ச்சல், தலைவலி, இருமல் இல்லாமலும்கூட கொரோனா தொற்று இருக்க வாய்ப்பு உள்ளது. 75% கோவிஷீல்டு, 25%  கோவாக்சின் தடுப்பு மருத்துகள் தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

Related Stories:

>