ராயல் சேலஞ்சர்சுடன் இன்று சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை

சென்னை: ஐபிஎல் 14வது சீசனின் 6வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தாவிடம் 10 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்ற சன்ரைசர்ஸ் அணி, இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக நடப்பு தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்குகிறது. நைட் ரைடர்சுக்கு எதிராக மணிஷ் பாண்டே , ஜானி பேர்ஸ்டோ பொறுப்பாக விளையாடியும் வெற்றி கைக்கு எட்டவில்லை. கேப்டன் வார்னர், சாஹா நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அப்துல் சமது, விஜய்சங்கர், முகமது நபி, ரஷித் ஆகியோரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் முதல் வெற்றி வசப்படும்.

ரஷித், நபி, புவி, நடராஜன், சந்தீப் பந்துவீச்சு கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கலாம்.

கேன் வில்லியம்சன்னுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான். எனினும் அணியில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது. கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியும் வெற்றிக்காக வரிந்துகட்டுகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்திய உற்சாகத்துடன் அந்த அணி இன்று ஐதராபாத்தை எதிர்கொள்கிறது. கோஹ்லி, டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், வாஷிங்டன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். ஹர்ஷல் படேல், சிராஜ், ஜேமிசன், சாஹல் பந்துவீச்சு ஐதராபாத் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும். தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்த பெங்களூர் அணியும், முதல் வெற்றிக்காக ஐதராபாத் அணியும் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இதுவரை மோதியதில்...

இரு அணிகளும் 18 முறை மோதியுள்ளதில் ஐதராபாத் 10-7 என முன்னிலை வகிக்கிறது. 2017 தொடரில் நடந்த ஒரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் ஐதராபாத் 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த சீசனில் கடைசியாக மோதிய எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதிகபட்சமாக ஐதராபாத் 231 ரன், பெங்களூர் 227 ரன் குவித்துள்ளன. குறைந்த பட்ச ஸ்கோராக ஐதராபாத் 135 ரன், பெங்களூர் 113 ரன்னில் சுருண்டுள்ளன.

Related Stories:

>