அகரம் கிராமத்தில் கோடை வெயிலுக்காக மண் பானைகள் செய்யும் பணி தீவிரம்

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அகரம் கிராமத்தில் கோடை வெயிலுக்காக  பானைகள் செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது. வரும் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி 29ம் தேதியுடன் முடிகிறது. ஆனால், இப்போதே அக்னி நட்சத்திரம் தொடங்கியதுபோல் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மக்கள் இளநீர், மோர், பழ ஜூஸ்கள், கூழ்,  குளிர்பானங்கள் ஆகியவற்றை நாடுகின்றனர். வசதி படைத்தவர்கள் வீடுகளில் குளிர்சாதன பெட்டியில் தண்ணீர் வைத்து குடிக்கிறார்கள். ஆனால், ஏழை எளிய மக்களுக்கு என்றுமே ‘மண் பானை’ தான் குளிர்சாதன பெட்டி.

இதில், தண்ணீர் பருகினால் எவ்வித நோயும் மனிதர்களை தாக்காது. இதனால், ‘மண் பானை’ தண்ணீரையே மக்கள் பெரிதும் பயன்படுத்துவார்கள். இந்நிலையில், பெரியபாளையம் அருகே அகரம், ஆரணி, தண்டலம்,  ஊத்துக்கோட்டை கலைஞர் தெரு, பஸ் நிலையம் எதிரில், ஊத்துக்கோட்டை அருகே புதுகுப்பம், பாலவாக்கம் ஆகிய பகுதிகளில்  மண் பாண்ட தொழிலாளர்கள்  கோடை வெயிலுக்காக ‘மண் பானைகள்’ செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மண் பாண்ட தொழிலாளர்கள்  கூறுகையில், எங்களுக்கு 2 மாதத்திற்கு முன்பே பானைகள் செய்வதற்கான ஆர்டர்கள் கிடைக்கும்.  ஆனால், இந்தமுறை தற்போது தான்  பானைகள் செய்ய ஆர்டர் வர தொடங்கியுள்ளது.

இங்கிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பானைகளை மொத்தமாகவும், சில்லறையாகவும்  வாங்கி செல்வார்கள். ஒரு பானையின் விலை  ரூ.50 முதல் ரூ.200 வரை வித விதமாக  விற்பனையாகும். எங்களது தொழில் வளம் பெறுவதற்கு, அரசு சார்பில் ஏரியில் மண் எடுக்க அனுமதி தரவில்லை. அதற்கு அனுமதி வழங்க வேண்டும். அரசு பானை செய்யும் இயந்திரம் வழங்க வேண்டும். கொரோனா தொற்றால் விற்பனை குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதற்கு,  அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>