திருவள்ளூர் நகராட்சியில் கடைக்காரர்களிடம் ரூ.45 ஆயிரம் அபராதம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் அரசின் விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைக்காரர்களிடம் இருந்து ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகிறது.

இதனால், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரம் சார்பில் கொரோனா தடுப்பூசி அளித்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், முககவசம் அணிதல் உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில் திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் ஒவ்வொருவரும் முககவசம் அணியவும், சமூக இடைவெளி விட்டு பணிகள் மேற்கொள்ளாத இடங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, நகராட்சி சுகாதார நல பிரிவு சார்பில் உதவி சுகாதார அலுவலர் ரமேஷ், காவல்துறை சார்பில் எஸ்ஐ ராக்கிகுமாரி ஆகியோர் கடைகள், பொது இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஜவுளி கடைகள், நகைக்கடைகள், பாத்திரக் கடைகள் என பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கொரோனா பரவும் வகையில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் தொழிலாளர்கள் பணிபுரிந்தது ஆய்வில் தெரியவந்தது. இதில் நகைக்கடையில் ஆய்வு செய்தபோது கடைக்காரருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கடைக்காரர்கள், சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து ரூ.45 ஆயிரம் வரை அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

Related Stories:

>