கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு பெயர் கருப்பு மை பூசி அழிப்பு பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயரை மாற்றுவதா? அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை என்ற பெயர் மாற்றத்துக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரியார் நூற்றாண்டு விழா கடந்த 1979ம் ஆண்டு கொண்டாடப்பட்டபோது, பூவிருந்தவல்லி சாலைக்கு, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயர் சூட்டப்பட்டது. சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை வந்தபோது நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் பெரியார் பெயர் நீக்கப்பட்டு கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்ற எழுதப்பட்டிருந்தது.

மேலும், நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில் ‘கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் அதிமுக அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் பெயர் விடுபட்டதை கண்டித்து நேற்று சென்னை ரிப்பன் மாளிகை அருகே வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்ற எழுத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் கருப்பு மை பூசி அழித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அதிமுக அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: அதிமுக அரசு 1979ல் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ என்று பெயர் மாற்றியது. அதனை இப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு, நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில் ‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’ என்று பெயர் மாற்றம் செய்தது ஏன்.  இதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: நெடுஞ்சாலைத் துறைக்கு பொறுப்பு வகிக்கின்ற முதல்வர் எடப்பாடிக்கு, தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள, இந்தப் பெயர் மாற்றத்தை உடனே நீக்க வேண்டும். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்: பகுத்தறிவுச் சுடர் தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தான் பாசிச அதிமுக அரசு மறந்து விட்டது என நினைத்தால், சாலைக்கு சூட்டப்பட்ட தந்தை பெரியார் பெயரையும் மறைப்பது ஏனோ. இதேபோல, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மமக தலைவர் ஜவாஹிருல்லா தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>