×

நிரம்பி வழியும் அரசு மருத்துவமனைகள் 5,400 மருத்துவர்கள் சென்னை வர உத்தரவு: தமிழக அரசு அவசர நடவடிக்கைநிரம்பி வழியும் அரசு மருத்துவமனைகள் 5,400 மருத்துவர்கள் சென்னை வர உத்தரவு: தமிழக அரசு அவசர நடவடிக்கை

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் உச்சம் அடைந்து வருகிறது. இதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. நோயாளிகளை கவனிக்க மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க தமிழக சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதன்படி ஒரு மாவட்டத்தில் இருந்து 150 மருத்துவர்கள் சென்னை வர சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 36 மாவட்டங்களில் இருந்து 5,400 மருத்துவர்கள் உடனடியாக சென்னை வர அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் 2ம் அலை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக ஆயிரக்கணக்கில் மட்டுமே தொற்று எண்ணிக்கை இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா வைரசின் 2வது அலை தீவிரமாக பரவி வருவதால் இந்தியாவில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த 2 நாட்களாக 7 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதை சமாளிக்க சென்னை மாநகராட்சி மீண்டும் பள்ளி, கல்லூரிகளை கொரோனா முகாம்களாக மாற்றி வருகிறது. கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை போன்று வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் திட்டத்தையும் மீண்டும் தொடங்கியுள்ளது. புதிய கட்டுப்பாடுகளை அதிரடியாக விதித்து வருகிறது.

ஆனாலும், அரசு பொதுமருத்துவமனைகளில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா வார்டுகள் எல்லாம் நிரம்பி வருகிறது. இதனால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொரோனா முகாம்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் ஒருநாள் பாதிப்பு என்பது மிக மோசமாக உள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையிலும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையிலும் மருத்துவ குழுக்கள் அதிகமாக தேவைப்படுகிறது. முதல் அலையின்போதும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மருத்துவ பணியாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அதேபோன்று இப்போதும் சென்னைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் காய்ச்சல் முகாம் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடந்த ஆண்டு 200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல் முகாம்களுக்கு பயன்படுத்தப்பட்டனர். இப்போதும் ஒவ்வொரு மாட்டங்களிலும் இருந்து தலா 150 மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை வரவழைக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. மேலும் பாதிப்பு அதிகமுள்ள மற்ற மாவட்டங்களில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர். இந்த தற்காலிக பணிகளுக்காக இந்திய மருத்துவ கழகத்திடம் தமிழக சுகாதாரத்துறை பட்டியல் கேட்டுள்ளது.

அதன்படி 36 மாவட்டங்களில் இருந்து 5,400 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை வர அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் உடனடியாக சென்னை வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஊரக மருத்துவ பணிகள் இயக்குனரகம் 3,500 செவிலியர்களை கொரோனா பணிக்காக கூடுதலாக பணியமர்த்தியுள்ளது. தமிழகத்தில் கூடுதலாக 11 மருத்துவ கல்லூரிக்கு அனுமதியளித்துள்ள நிலையில், அதற்கான செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2,500 செவிலியர்கள் 11 மருத்துவ கல்லூரிக்கு பணியமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் கல்லூரி திறக்கப்படும் வரை கொரோனா பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அதேபோல கொரோனா தொற்று கூடுதலாக உள்ள மாவட்டங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்களை அதிகப்படுத்த உள்ளனர். கூடுதலாக பணியமர்த்தப்பட உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா முகாம்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் தற்காலிகமாக ஈடுபடுவார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இந்த பாதிப்பின் காரணமாக டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் அதிகளவில் இந்த மாவட்டங்களுக்கு தேவைப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து மருத்துவ குழுவினர் இங்கு அழைக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கான நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 150 மருத்துவர்கள் என 5,400 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அழைக்கப்பட்டு குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ஓரிரு நாளில் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்’’ என்றனர்.

* கொரோனா பரவல் அதிகரிப்பால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் கொரோனா முகாம்களாக மாநகராட்சி மாற்றி வருகிறது.
* வீடுவீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் திட்டத்தையும் மீண்டும் தொடங்கியுள்ளது.
* அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.

Tags : government ,Chennai ,Tamil Nadu , Overcrowded government hospitals 5,400 doctors ordered to come to Chennai: Tamil Nadu government emergency action
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...