×

சுசீந்திரத்தில் பட்டபகலில் துணிகரம்; குமரி பெண் அதிகாரி உள்பட 5 வீடுகளில் கொள்ளை: 3 பேரின் கைரேகை சிக்கியது

சுசீந்திரம்: சுசீந்திரம் அருகே மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து கழக பெண் அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளைபோனது. இதில் 3 பேரின் கைரேகை சிக்கி உள்ளது. இதுபோல் மேலும் 4 வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை ஜோதினிநகர் பகுதியை சேர்ந்தவர் கலா (57). மார்த்தாண்டம் வட்டாரபோக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலைபார்த்து வருகிறார். தினந்தோறும் காலை 9 மணிக்கு வேலை செல்வது வழக்கம். பின்னர் வேலை முடிந்து இரவு 8 மணிக்கு வீடு திரும்புவார். அதேபோல் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு கலா சென்றார்.

இதனை பயன்படுத்திய கொள்ளையர்கள் வீட்டின் முன்புற கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். பின்னர் படுக்கை அறையில் உள்ள பீரோவையும் உடைத்து உள்ளனர். அப்போது பீரோவில் இருந்த துணிகள், பொருட்களை எடுத்து படுக்கை அறை முழுவதும் வீசியுள்ளனர். பீரோவில் இருந்த பதினெட்டேகால் பவுன் நகை, ரூ.85 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் திருடிக்கொண்டு மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர். இதற்கிடையே வேலைக்கு சென்ற கலா வீட்டிற்கு இரவு சுமார் 8 மணி அளவில் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. உடனே அதிர்ச்சியல் உறைந்தார். தொடர்ந்து கொள்ளை குறித்து சுசீந்திரம் போலீசுக்கு கலா தகவல் கொடுத்தார்.

இந்த தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து கொள்ளை நடந்த பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வழக்கமாக கலா காலை 9 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டு இரவு வருவதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இந்த தகவல் அறிந்ததும் கைரேகை நிபுணர் ஜவகர்லால் தலைமையில் நிபுணர்கள் கொள்ளைபோன வீட்டிற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் 3 பேரின் கைரேகை பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே இந்த கொள்ளையில் 3 பேர் ஈடுபட்டு இருக்கலாமோ? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது தவிர கொள்ளையில் உள்ளூர் கொள்ளையர்கள் ஈடுபட்டு இருப்பார்களா? அல்லது வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டு இருப்பார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

அடுத்தடுத்த சம்பவங்கள் சுசீந்திரம் அருகே பறக்கை பொட்டல்விளையை சேர்ந்தவர் சுரேஷ் (41). டெம்போ டிரைவர். நேற்று காலை பணிக்கு சென்றவர் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆஸ்ரமம் சாஸ்தான்கோயில் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன்பிள்ளை (31). கூடன்குளம் அணுமின் நிலையத்தில் வேலை செய்கிறார். அவரது வீட்டிலும் பீரோவை உடைத்து ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. சுசீந்திரம் ஆஞ்சநேயாநகரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (43). தெங்கம்புதூர் மின்வாரியத்தில் வேலை ெசய்கிறார். நேற்று வேலைக்கு சென்றவர் இரவு ஷிப்ட் முடிந்து வந்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிற்குள் இருந்த பீரோ மற்றும் பொருட்களும் உடைக்கப்பட்டிருந்தது.

சுசீந்திரம் ஆசாத்நகரை சேர்ந்தவர் வசந்தா (75). இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றிருக்கிறார். நேற்று மாலை இவரது வீட்டில் மின்விளக்கை போடுவதற்காக பக்கத்து வீட்டில் உள்ளவர் வந்தார். அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்தார். உடனடியாக வசந்தாவுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ மற்றும் அங்கிருந்து பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பணம் எதுவும் கிடைக்காததால் பொருட்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவங்கள் குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 5 இடங்களில் அதுவும் பட்டபகலில் வீடுகளை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆள் இல்லாத வீடுகளை தெரிந்து இந்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றி உள்ளனர். எனவே இது உள்ளூர் ஆசாமிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்றும், பலர் கும்பலாக புகுந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். ஒரே நாளில் பட்டபகலில் 5 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முககவசம் சோதனையில் போலீசார்
குமரி  மாவட்டத்தில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து  நடந்து வருகிறது. போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை பிடித்தும்  வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பால் போலீசாருக்கு முககவசம்  சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து போலீசாரும் சாலையில்  நின்று முககவசம் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை  பயன்படுத்திய கொள்ளையர்கள் நேற்று காலை பட்டப்பகலில் வீடுகளில் புகுந்து  பொருட்களை கொள்ளை அடித்துச்சென்றுள்ளனர்.

Tags : Susindra , Venture into graduation in Suchindram; Robbery in 5 houses including Kumari female officer: Fingerprints of 3 persons were found
× RELATED கொரியர் வேன் கவிழ்ந்து டிரைவர் பலி...