×

ஒரே பகுதியில் 8 பேருக்கு கொரோனா வல்லன்குமாரவிளையில் 20 வீடுகள் அடைப்பு: வீட்டில் இருந்து மக்கள் வெளியே வர தடை நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் முகாம்

* வீட்டில் இருந்து மக்கள் வெளியே வர தடை
* நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் முகாம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சிக்கு உள்பட்ட வல்லன்குமாரன்விளையில் ஒரே பகுதியில் 8 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து 20 வீடுகள் அடைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுப்பாடு பகுதியில் இருந்து மக்கள் வெளியே வர அதிகாரிகள் தடைவிதித்து உள்ளனர். குமரி மாவட்டத்தில் கொரோனா 2வது அலை மக்களை நாளுக்கு நாள் மிரட்டி வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியை பொறுத்தவரை பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா பாதிப்பு பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள வல்லன்குமாரவிளை ஹவுசிங்போர்டு காலனி பகுதியில் 5 வீட்டில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 வீடுகளில் உள்ளவர்கள் தவிர அந்த பகுதியில் வேறு யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் அந்த பகுதியை சுற்றிலும் அதிகம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது மேலும் பரவாமல் இருக்கும் வகையில் அந்த பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித், மாநகர்நல அதிகாரி டாக்டர் கின்சால் மற்றும் சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை உள்ளிட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் 5 வீடுகளை சுற்றியுள்ள 20 வீடுகளை சுற்றி காவல்துறை உதவியுடன் பேரிகார்டு கொண்டு அடைக்கப்பட்டது. கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதியில் இருந்து தேவையில்லாமல் யாரும் வெளியே செல்லக்கூடாது என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தவிர கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள பகுதியில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு காவல்துறை போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் யாரும் வெளியே சென்றால் தகவல் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாநகர்நல அதிகாரி டாக்டர் கின்சால் கூறியதாவது: 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வல்லன்குமாரவிளை ஹவுசிங்போர்டு காலனி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தவிர மற்றவர்கள் வேலை சம்பந்தமாகவோ அல்லது தேவைக்கு மட்டுமே வெளியே செல்லவேண்டும்.

பிற பகுதியை சேர்ந்தவர்கள் இந்த பகுதிக்கு உள்ளே செல்லகூடாது. அந்த வகையில் 20 வீடுகளை சுற்றி காவல்துறை உதவியுடன் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது என்றார். நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட சரலூர் மீன் மார்க்செட், செட்டிகுளம், அசிசி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் செயல்பட்ட கடைகள், முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் தலைமையில் அதிகாரிகள் ரூ.3900 அபராதம் விதித்தனர்.

கொரோனா பெண் ஓட்டம்
வல்லன்குமாரவிளை ஹவுசிங் போர்டு காலனி பகுதி அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொரோனா கண்டறியப்பட்ட 8 பேரில் 52 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தடையை மீறி  நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். இன்று மாநகராட்சி  அதிகாரிகள் கணக்கெடுக்கும்போது அந்த பெண் மாயமாகி இருப்பது தெரியவந்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இது தொடர்பாக கோட்டார் போலீசில் புகார்  செய்தனர். போலீசார் அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.

தடுப்பூசி மையத்தில் கலெக்டர் ஆய்வு

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் இன்று காலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் செயல்படும் தடுப்பூசி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரி, கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ் உள்பட மருத்துவ துறை அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டர் பார்வையிட்டார். மேலும் கொரோனா நோயாளிகளை தங்க வைக்க கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் பார்வையிட்டார். பின்னர் களியக்காவிளை பகுதியில் குமரி-கேரள எல்லையில் உள்ள காக்கவிளை, களியக்காவிளை மற்றும் பளுகல் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளை ஆய்வு செய்ய உள்ளார்.


Tags : Corona Valungumaruvalla ,Nagarco , Corona for 8 people in one area: 20 houses closed in Vallan Kumaravilai
× RELATED நாகர்கோவில் மாநகராட்சிக்கு 104 தூய்மை...