×

கொல்கத்தாவுடன் இன்று மோதல் வெற்றிக்கணக்கை துவங்குமா மும்பை?

மும்பை: நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். அதிரடி பேட்ஸ்மேன்களான கேப்டன் ரோகித்சர்மா (19 ரன்), சூர்யகுமார் யாதவ் (31 ரன்), இஷான் கிஷன் (28 ரன்), ஹர்திக் பாண்ட்யா (13 ரன்), பொல்லார்ட் (7 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் நிலைத்து நின்று சோபிக்கவில்லை.

இதனால் மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 159 ரன்களே எடுத்தது. பந்து வீச்சும் மெச்சும்படி அமையவில்லை. சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் 43 ரன்கள் வாரி வழங்கியதுடன் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக்கின் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்துவிட்டதால் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ் லின்னுக்கு இடம் கிடைக்குமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் அந்த வெற்றி நம்பிக்கையுடன் கொல்கத்தா அணி இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குகிறது. ஐபிஎல் 5வது லீக் போட்டி இன்று மும்பை-கொல்கத்தா அணிகளுக்கு இடையே சென்னையில் நடைபெறுகிறது. கொல்கத்தா அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் நிதிஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, ஆந்த்ரே ரஸ்செல், இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

மும்பை, கொல்கத்தா ஆகிய இரு அணிகளின் பேட்டிங் வரிசையும் மிகவும் வலுவானதாகும். இதனால் இன்றைய மோதலில் அதிரடியில் எந்த அணி அசத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. அதே வேளையில் சாம்பியன் அணியான மும்பை இன்று கொல்கத்தாவை வென்று வெற்றிக்கணக்கை துவங்குமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இரு அணிகளும் வெற்றிக்கு கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டம் கடும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : Mumbai ,Kolkata , Will Mumbai start the clash with Kolkata today?
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!