×

கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி: தோல்வி அடைந்தாலும் எங்கள் வீரர்கள் அருமையாக ஆடினார்கள்...சதம் அடித்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சுசாம்சன் நெகிழ்ச்சி

மும்பை: 14வதுஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று 4ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சுசாம்சன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இதன்படி, பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக லோகேஷ் ராகுலும் மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். 2.4 ஓவரில் 22 ரன்கள் சேர்த்த நிலையில் பஞ்சாப் அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. 14 ரன்கள் எடுத்த நிலையில் சேட்டன் சகாரியா பந்தில் அகர்வால் ஆட்டமிழந்தார்.

பின்னர், ராகுலுடன் ஜோடி சேர்ந்த `யுனிவர்சல் பாஸ்’ கிறிஸ் கெய்ல் அதிரடி காட்டினார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி 67 ரன்கள் சேர்த்த நிலையில், கெய்ல் 40 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ராகுல் அரைசதம் கடந்தார். அவருடன் இணைந்த தீபக் ஹூடா பிரமிப்பான ஆட்டம் ஆடினார். அவரது பேட்டில் பட்ட பந்துகள் நாலாபுறமும் தெறித்து ஓடின. குறிப்பாக ஆறு சிக்சர்களை அடித்து அவர் அமர்க்களப்படுத்தினார். பின்னி பெடலெடுத்துக்கொண்டிருந்த அவர் 28 பந்துகளில் 64 ரன் (4 பவுண்டரி 6 சிக்சர்) எடுத்து அவுட் ஆனார்.

தொடர்ந்து ஆடவந்த நிகோலஸ் பூரான் டக் அவுட் ஆகி வெளியேற பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. 18வது ஓவரை வீசிய கிறிஸ்மோரிஸ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ராகுல் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் 91 ரன்களில் அவுட்டானார். இறுதியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. புதுமுக வீரரான சேட்டன் சகாரியா 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து கடினமான இலக்கை துரத்திப்பிடிக்கும் நோக்கில் ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பென் ஸ்டோக்ஸ்-மேனன் ஓரா களமிறங்கினர். ஸ்டோக்ஸ் ரன் எடுக்காமலும், ஓரா 12 ரன்கள் சேர்த்த நிலையிலும் அவுட்டாயினர். இந்த நெருக்கடியான நிலையில் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் விளையாடினார். மறுமுனையில் ஜோஸ் பட்லர் (25), ஷிவம்துபே (23), ரியான் பராக் (25) போன்றவர்கள் ஓரளவுக்கு கைகொடுத்தனர். இதனால் ராஜஸ்தான் அணி வெற்றிபெறும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அதை மெய்பிப்பதுபோல் சாம்சன் தொடர்ந்து அதிரடியாக ஆடி சதம் விளாசினார். ஐபிஎல் தொடரில் அறிமுக கேப்டன் முதல் போட்டியிலேயே சதம் விளாசுவது இதுதான் முதல்முறையாகும். இறுதியில் ராஜஸ்தான் வெற்றிபெற 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் முதல் மூன்று பந்துகளை சிறப்பாக வீசினார். இதனால், கடைசி மூன்று பந்துகளில் 11 ரன்கள் தேவை என்னும் நிலை ஏற்பட்டது. அப்போது சாம்சன் சிக்சர் அடித்தார். ஆனால் அடுத்த பந்தில் ரன் எடுக்கவில்லை. அதற்கு அடுத்த பந்தில் அவுட் ஆனார். இதனால், பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் சாம்சன் 63 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உட்பட 119 ரன்கள் குவித்து அசத்தினார்.

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், ‘‘முதல் பாதியில் நாங்கள் சரியாக ஆடவில்லை. அதிக ரன்களை வாரிக் கொடுத்தோம். ஆனால் 2வது பாதியில் மிகவும் சிறப்பாக ஆடினோம். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இது எனது சிறப்பான ஆட்டம் என்றே எண்ணுகிறேன். முதலில் அதிகமாக ஒரு, ஒரு ரன்னாக எடுத்தேன். எனக்கான ரிதம் கிடைத்தவுடன், பவுண்டரிகளை விளாச ஆரம்பித்தேன், உண்மையில் மிகவும் ரசித்து ஆடினேன்.

இந்த ஆட்டம் அதுவாகவே தானாகவே அமைந்தது என்று நினைக்கிறேன். மனதை ஒருநிலைப்படுத்தி, கூர்மையான உணர்வுகளுடன் பந்துகளை எதிர்கொண்டேன். ஆனாலும் வெற்றி கிட்டவில்லை. வெற்றி வாய்ப்புகள் இரு அணிகளுக்குமே சமமாக இருந்தன. இதை தவிர இப்போது சொல்வதற்கு எனக்கு வேறு வார்த்தைகள் இல்லை. தோல்வியடைந்தாலும், எங்கள் அணியின் வீரர்கள் நன்றாக ஆடினார்கள்’’ என்று தெரிவித்தார்.

பேட்டிங் சூப்பர்... பவுலிங் சொதப்பல்

பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில், ‘‘எங்கள் அணி வீரர்களிடம் கடைசி வரை நான் நம்பிக்கை வைத்திருந்தேன். 2 விக்கெட்டுகள் வீழ்ந்தால், ஆட்டத்தின் போக்கு எங்களுக்கு சாதகமாக மாறி விடும் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. சில கேட்சுகளை நழுவவிட்டோம். ஆனாலும் 12வது ஓவர் வரை ஆட்டம், எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தோம். ஆனால் பந்துவீச்சில் சற்று பின்தங்கினோம். எங்கள் பவுலர்கள் சரியான கோட்டில், சரியான அளவில் பந்துவீசவில்லை.

 இக்கட்டான சமயங்களில் அர்ஷ்தீப் சிங், அற்புதமாக பந்து வீசி, ஆட்டத்தின் போக்கை மாற்றினார். மேலும் எங்கள் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் தீபக் ஹூடா அதிரடியாக ஆடினர். அவர்களது சிறப்பான ஆட்டத்தினால் ஒரு பெரிய ஸ்கோரை எங்களால் எட்ட முடிந்தது. எப்படியோ வெற்றியுடன், இந்த தொடரை துவக்கியதில் மிக்க மகிழ்ச்சி’’ என்று தெரிவித்தார்.

Tags : Punjab Kings ,Rajasthan ,Sanju Samson , Punjab Kings thrill win in last over: Despite the defeat, our players drove brilliantly ...
× RELATED கேப்டன் சஞ்சு சாம்சன் 82* ரன் விளாசல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி