×

மணப்பாறை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் மாற்றுப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்-கிலோ ரூ.2க்கு கேட்டதால் அதிர்ச்சி

மணப்பாறை : மணப்பாறை வட்டாரத்தில் தக்காளி விலை வீழ்ச்சி காரணமாக மாற்றுப் பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
துவரங்குறிச்சிஅருகே என் டப்புளி, கருமலை, மாங்கனாபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி , வடக்கு எல்லைக் காட்டுப்பட்டி, செட்டியப்பட்டி, சிலம்பம்பட்டி, வையம்பட்டி, மற்றும் மருங்காபுரி ஒன்றியப் பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களில் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். துவரங்குறிச்சி, மணப்பாறை மற்றும் அய்யலூரில் உள்ள சந்தைக்கு தக்காளிகள் கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஒரு கிலோ ரூ. 2 க்கு கேட்டதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமல் செடியிலே விட்டனர். நீண்டநாள் பராமரிக்க முடியாது என்பதால் ஆடு, மாடுகளுக்கு தீவனமாகவும், குப்பையிலும் வீசி சென்றனர். இந்த நிலையில் மாற்று பயிர் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவரை, வெங்காயம் குறிப்பாக அவரைக்காய் தற்போது ஒரு கிலோ ரூ.30க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் 45 நாட்களில் பலன் தருகிறது.

தண்ணீரும் குறைந்த அளவே தேவைப்படுவதால் அவரைக்காய் சாகுபடி செய்ய விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் முகூர்த்த நாட்கள் வர இருக்கும் நிலையில் வெங்காய விலை அதிகரிக்கும் என்பதால் தற்போதே அதனை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி சாகுபடி செய்திருந்த நிலையில் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் அவரைக்காய், வெங்காயம் உள்ளிட்ட மாற்று பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ. 40 க்கு விற்கப்படுகிறது. மேலும் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் விளையும் சின்னவெங்காயம் சுவை கூடுதலாகவும், உடல் நலத்திற்கு ஏற்றதாகவும் இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவு வாங்கி செல்கிறார்கள் என்றனர்.

Tags : Manapparai , Manapparai: Farmers in Manapparai area are showing interest in cultivating alternative crops due to the fall in tomato prices.
× RELATED மணப்பாறை அருகே கிராவல் மண்...