×

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை-புதுச்சேரிக்கு மேலும் 1 லட்சம் தடுப்பூசிகள்

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை முழுவதுமாக கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 11ம் தேதி முதல் 14ம் தேதி (நாளை) வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் 100 இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில், அரசு செயலர்கள் அளவிலான கொரோனா மேலாண்மை குழு கூட்டம் தலைமை செயலக கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். தலைமை செயலர் அஸ்வனிகுமார், கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, மகேஸ்வரி, ஏடிஜிபி ஆனந்தமோகன், சுகாதாரத்துறை செயலர் அருண் மற்றும் அரசு செயலர்கள், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காரைக்கால், மாகே, ஏனாம் பகுதி அதிகாரிகள் காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றனர். தற்போதைய நிலவரம், கொரோனா தடுப்பூசி திருவிழாவை முன்னிட்டு அந்தந்த பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும், போதிய அளவிலான மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசி ஆகியவற்றின் இருப்பு நிலவரம், அதற்கான நிதி தேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  மேலும், தடுப்பூசி முகாம்கள் குறித்த விழிப்புணர்வு, மருத்துவமனைகளில் தனி வார்டுகள், படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் குறித்து கவர்னர் கேட்டறிந்தார். கொரோனா கட்டுப்பாட்டு அறை, கட்டணமில்லா தொலைபேசி எண் 104 ஆகியவற்றின் செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் சிறிய அளவிலான கட்டுப்பாட்டு மண்டலங்கள் உருவாக்குவது, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு உதவிகள், அவர்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது ஆகியவற்றை ஆரம்ப சுகாதார பணியாளர்களுடன் இணைந்து காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என கவர்னர் அறிவுறுத்தினார்.

கடைவீதிகள், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கோயில்கள், திருவிழாக்கள் போன்ற இடங்களில் அந்தந்த நிர்வாகத்தினரே அதனை உறுதி செய்ய வேண்டும். விழாவிற்கு முன்னும் பின்னும் இடங்கள் தூய்மைப்படுத்தப்படுவதை உள்ளாட்சி துறையினர் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

முன்னதாக, தலைமை செயலர் அஸ்வனி குமார் பேசும்போது, புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வரும் நிலையில், மேலும் 1 லட்சம் தடுப்பூசிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளன என்று தெரிவித்தார்.

Tags : Governor , Pondicherry: The government is taking various measures to control the spread of corona in the state of Pondicherry. Last 11th
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...