×

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பரப்புரை தடைக்கு தலைவர்கள் பலர் கண்டனம்..!!

கொல்கத்தா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் விதித்த தடைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் பரப்புரை மேற்கொண்டதாகவும், அப்போது மத்திய பணிகளுக்கு எதிராக பேசியதாகவும் தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்தது. இது தொடர்பாக மம்தா பானர்ஜி அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என தெரிவித்த தேர்தல் ஆணையம், மம்தா பானர்ஜி 24 மணி நேரத்திற்கு பரப்புரை மேற்கொள்ள தடை விதித்துள்ளது.

இதற்கு ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் கூறியிருக்கிறார். இதனிடையே தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை நியாயமான தேர்தல்களில் தான் நிலை கொண்டிருப்பதாக கூறியுள்ளார். அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்வதோடு நடுநிலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயகம் மற்றும் இறையாண்மையின் மீதான நேரடி தாக்குதல் என்றும் வங்கப்புலிக்கு தாங்கள் துணை நிற்பதாகவும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார். தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பரப்புரைக்கு தடை விதித்திருப்பது ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என கூறியிருக்கிறார்.


Tags : Western ,Chief Minister ,Mamta Banerjee , West Bengal Chief Minister Mamata Banerjee, campaign, leaders
× RELATED உன்னத உறவுகள்