கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்-கொரோனா பரவும் அபாயம்

பெரியகுளம் : கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரை அருவியில் ஒரே இடத்தில் முகக் கவசமின்றி சுற்றுலாப்பயணிகள் குவிவதால் கொரொனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும்,  கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு தளர்வுடன் கூடிய ஊரடங்கு அறிவித்தும் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்த சூழலில் கும்பக்கரை அருவியில்  நீர் வரத்து குறைவால் நீர் துர்நாற்றம் வீசுவதோடு தேங்கி கிடக்கும்  நீரில்  சுற்றுலாப் பயணிகள் கூட்டம், கூட்டமாக சேர்ந்து குளித்து வருகின்றனர்.

இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முகக்கவசம், கிருமி நாசினி கொடுக்காமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வனத்துறையினர் அறிவுரை வழங்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இதனால் கொரோனா தொற்று ஏற்படும் பெரும் அபாயம் உள்ளது. எனவே,  மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை வழங்கி சமூக இடைவெளி கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: