சென்னையில் கொரோனா தொற்று அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றுக்கு இலக்காவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் உள்ள பெரும்பாலான படுக்கைகள் நிரம்பிவிட்டன. சென்னையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சிகிச்சை முடிந்து திரும்புவோரின் எண்ணிக்கையை விட பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகள் அனைத்தும் மிக வேகமாக நிரம்பி வருகின்றன.

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் உள்ள 500 படுக்கைகளில் 490 படுக்கைகள் நிரம்பி விட்டன. ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மொத்தமுள்ள 575 படுக்கைகளில் 550 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி இருக்கும் நிலையில் ஏராளமானோர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்திருக்கிறார்கள். இதனால் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகளை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தி வருகிறது. அத்திப்பட்டு பகுதியில் 4,800 படுக்கை வசதிகளை கொண்ட சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்ணா நகர் அரசு புறநகர் மருத்துவமனை, கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆகியவற்றில் சுமார் 200 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு அரசு கல்லூரி விடுதிகள், அரசு கட்டிடங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொற்று அதிகரித்து வருவது குறித்து சென்னையில் ஆக்சிஜன் வசதி இணைக்கப்பட்டிருக்கும் அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories:

>