×

ரஷ்யாவின் ஸ்புட்னிக் - v தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்..!!

டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் - v கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவசரகால தேவைக்கான கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் - v-ஐ பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி கொண்டிருக்கிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி பிரதமர் வலியுறுத்தி வருகிறார். சுகாதார அமைப்புகள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் - v கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கோவிஷீட்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் 3வது தடுப்பூசி ஸ்புட்னிக் - v ஆகும். நேற்றைய தினம் தடுப்பூசிகள் குறித்த ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. வல்லுநர்கள் ஆலோசனையில் அவசரகால பயன்பாட்டிற்கு ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் இன்று மத்திய அரசு அதிகாரபூர்வ உத்தரவை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக ஸ்புட்னிக் - v தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தடுப்பூசியின் மூலம் பின்விளைவுகள் இருக்காது. கொரோனா தொற்றுக்கு எதிராக செயல்படும் என கருதப்படுவதால் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த தடுப்பூசியை இந்தியாவை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இறக்குமதி செய்து சோதனைகளை நடத்தி கொண்டிருக்கிறது. அந்த சோதனையில் கிடைத்த புள்ளி விவரங்கள் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டு அதனையே பரிசீலனையும் செய்யப்பட்டது. ரஸ்யா உள்ளிட்ட 55 நாடுகளில் ஸ்புட்னிக் - v தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. ஸ்புட்னிக் - v தடுப்பூசி கொரோனாவை தடுப்பதில் 91.6 சதவீதம் செயல்திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Russia ,Drug Administration of India , Russia, Sputnik - v Vaccine, Indian Drug Control Organization
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...