×

துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசு லோன் வாங்கி தருவதாக பணம் வசூல் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சமதா சைனிக் தளம் ஆர்ப்பாட்டம்

தங்கவயல்: தங்கவயலில் அப்பாவி துப்புரவு தொழிலாளர்களிடம் அவர்களுக்கு அரசு வழங்கும் 10 லட்சம் லோன் தொகையை பெற்று தருவதாக கூறி சுமார் 23 லட்சத்தை ஏமாற்றி வசூல் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமதா சைனிக் தள சங்கத்தினர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு வழங்கினர். துப்புரவு பணியாளர்கள் பொருளாதார ரீதியாக மேம்பட வேண்டும் என்பதற்காக அரசு அவர்களுக்கு திருப்பி செலுத்தாத லோன் வழங்குகிறது. இதை பயன்படுத்தி கொள்ளும் சில இடை தரகர்கள், இந்த லோனை பெறும் வழி முறைகளை அறியாத அப்பாவி துப்புரவு தொழிலாளர்களை ஏமாற்றி அரசு லோனை பெற்று தருவதாக ஆசை காட்டி, கணிசமான தொகையை வசூல் செய்து கொண்டு ஏமாற்றி விடுகின்றனர்.

இதே போல் சுமார் 19 துப்புரவு தொழிலாளர்களிடம் லோன் வாங்கி தருவதாக ஏமாற்றி சுமார் 23 லட்சத்தை வசூல் செய்துள்ளவர் மீது நடவடிக்கை எடுத்து அப்பாவிகளின் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கோரி தங்கவயல் தாலுகா தாசில்தார் அலுவலகம் முன்பு  பாதிக்கப்பட்டவர்களும் சமதா சைனிக் தள சங்கத்தினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய, சமதா சைனிக் தள தாலுகா தலைவர் லியோ ஜோசப் கூறும் போது, துப்புரவு தொழிலாளர்கள் சமூக அந்தஸ்து பெறவும், பொருளாதார மேம்பாடு அடையவும், அரசு அவர்களுக்கு திருப்பி செலுத்தாத லோன் வழங்குகிறது.

இதை பயன் படுத்தி கொள்ளும் இடை தரகர்கள் அப்பாவி துப்புரவு தொழிலாளர்களை ஏமாற்றி லோனை பெற்று தருவதாக கூறி பணம் வசூல் செய்து ஏமாற்றி விடுகின்றனர். அது போல் நாகராஜ் என்பவர் 19 துப்புரவு தொழிலாளர்களிடம் சுமார் 23 லட்சத்தை வசூல் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கபட வில்லை. எனவே போலீஸ் எஸ்.பியிடமும் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி அதிகாரியிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மாவட்ட கலெக்டருக்கும் புகார் மனு கொடுக்க உள்ளோம். இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க பட வில்லை என்றால் தொடர்ந்து கடுமையான போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்’’. என்றார்.

Tags : Government ,Samata Sainik , Cleaning workers, Samata Sainik site, demonstration
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...