×

டெல்லியில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்று: கெஜ்ரிவால் அவசர ஆலோசனை: பிரத்யோக சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தல்: தீவிர பாதிப்புள்ளவர்கள் மட்டும் படுக்கைகளை பயன்படுத்த அறிவுரை

புதுடெல்லி: தேசிய தலைநகரில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை சமாளிக்க  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை பிரத்யேக கோவிட் -19 சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். டெல்லியில் கொரோனா தொற்று பரவலின் நான்காம் அலை வீச தொடங்கி, தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது. தற்போதைய நிலையில் நான்காம் அலை மிகுந்த தீவிரத்தன்மை கொண்டதாக உள்ளது என்று முதல்வர் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். அதோடு, அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்து தயார் நிலையில் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றி நேற்று நடந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் கெஜ்ரிவால் மேலும் தெரிவித்ததாவது: டெல்லியில் கொரோனா பரவல் நிலைமை மிகவும் தீவிரமானதாக உள்ளது. எனவே, நகரில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கான படுக்கைகளின்  எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கடந்த ஆண்டு நவம்பரில், கொரோனா தொற்றுநோய்  உச்சத்தில் இருந்தபோது தயார் நிலையில் வைக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கையை போன்று தற்போது  ​​அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  படுக்கைகளின் எண்ணிக்கை  அதிகரித்து இருக்க வேண்டும்.

எனவே, சில தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சைக்கான பிரத்யேக மையங்களாக மாற்ற வேண்டும். இதன்நோக்கம் என்பது, நகரவாசிகளுக்கு சிறந்த முறையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது தான். இதுமட்டுமின்றி மத்திய அரசும் தனது கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளை தயார் நிலையில் வைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 11,491 பேருக்கு கொரோனா பலி எண்ணிக்கையும் 72 ஆனது

டெல்லியில் கொரோனா தொற்று பரவும் வேகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 11,491 பேர் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் 72 பேர் பலியானார்கள். டெல்லியில் கொரோனா 4ம் அலை தாக்கம் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக உள்ளது. நேற்று முன்தினம் 92,397 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 11,491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒருநாள் தொற்று பாதிப்பின் புதிய உச்சம் ஆகும். கடந்த ஆண்டு கூட ஒருநாள் தொற்று எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது இல்லை. 4ம் அலை காரணமாக டெல்லியில் இந்த அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் பாதிப்பு சதவீதம் 9.43ல் இருந்து 12.44 சதவீதமாக உயர்ந்தது.

ஒட்டுமொத்தமாக டெல்லியில் இதுவரை 7,36,688 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 72 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதனால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 11,355ஆக உயர்ந்தது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஒரே நாளில் 77 பேர் பலியானார்கள். அதன்பின் அதிகபட்சமாக நேற்று பலி எண்ணிக்கை தொட்டது. டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி 131 பேர் பலியானதே இதுவரை ஒருநாள்பலி எண்ணிக்கையின் புதிய உச்சமாக இருந்து வருகிறது. ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 38,095 ஆனது, கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 6,175 ஆனது. வீட்டு தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 19,354 ஆனது.


Tags : Delhi ,Kejriwal , Delhi, Corona, Consulting
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...