×

டெல்லியில் ஏப்.15ல் தொடங்கும் கால்பந்து போட்டிக்கு தடை வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் ஏப்.15ல் தொடங்கும் கால்பந்து போட்டிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி கால்பந்து சங்கம் சார்பில் ஆண்டு தோறும் இளைஞர்களுக்கான கால்பந்து போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு கால்பந்து போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டன. இந்த நிலையில் கொரோனா தொற்று டெல்லியில் வேகமாக பரவி வருவதால் கால்பந்து போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வக்கீல்கள் நியாதி பத்வர்தன், ஷாஷி பிரதாப்சிங் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா வேகமாக பரவி வரும் நேரத்தில் டெல்லி கால்பந்து சங்கம் பிரமாண்ட போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகளின் பொதுவான இடத்தில் தனிமைப்படுத்துதல், வீரர்கள் வெளித்தொடர்பு இல்லாமல் இருத்தல் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை. இப்போதைய சூழலில் கொரோனா வேகமாக பரவி வருவதை போட்டியை ஏற்பாடு செய்தவர்கள் உணராமல் அனைத்து நடவடிக்கைகளையும் செய்துள்ளனர். அதனால்தான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டிய எந்தவித முன்னெச்சரிக்கையும் அல்லது அதுபற்றிய தடுப்பு நடவடிக்கை கூட அவர்கள் எடுக்கவில்லை. வைரஸ் தொற்று  பரவுவதை தடுக்க தேவையான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கூட பின்பற்றப்படவில்லை. அதோடு டெல்லி உள்பட எந்த மாநிலங்களிலும் இளைஞர்களுக்கு கால்பந்து போட்டிகள் நடத்தக்கூடாது என்று அகில இந்திய கால்பந்து சங்கம் ஏப்ரல் 2ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையை மீறி இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். எனவே கால்பந்து போட்டி நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங் முன்னிலையில் அவசர மனுவாக விசாரிக்கப்பட்டது. அப்போது டெல்லி கால்பந்துசங்கம் சார்பில் ஆஜரான வக்கில் ஆஷிம் கூறுகையில்,’ மத்திய, மாநில அரசுகள் உத்தரவுப்படி வீரர்களை தனிமைப்படுத்தி பயோ பபுள் விதிமுறைகளை பின்பற்ற தயாராக உள்ளோம். ஏப்ரல் 15க்கு பதில் ஏப்ரல் 18ம் தேதி போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிரதீபா, ‘ டெல்லியில் கால்பந்து போட்டி நடத்துவது குறித்தும், அதற்கான கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவான அறிக்கையாக ஏப்ரல் 16ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு  வழக்கை தள்ளிவைத்தார்.

Tags : Delhi , Delhi, football match, case
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு