கொரோனா பாதிப்பு விஷயத்தில் அரசு உண்மையை மறைக்கிறதா? குஜராத் ஐகோர்ட் கடும் கண்டனம்

அகமதாபாத்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கும், அரசு கூறுவதற்கும் முரண்பாடாக இருக்கிறது என குஜராத் மாநில அரசை உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று சூழல், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி விக்ரம் நாத் மற்றும் நீதிபதி பார்கவ் கைரா ஆகியோர் முன்னிலையில் வீடியோ கான்பரன்சில் விசாரணைக்கு வந்தது.  அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெனரல் கமல் திரிவேதி, கொரோனா சூழலை கட்டுப்படுத்துவதற்காக குஜராத் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துக்கூறினார்.

இதற்கு நீதிபதிகள் அமர்வு, ‘‘நீங்கள் நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்கும், மாநிலத்தில் நிலவும் சூழலும் முற்றிலும் முரணாக இருக்கின்றது. நீங்கள் அனைத்தும் சரியாக இருப்பதாக தெரிவிக்கிறீர்கள். ஆனால் அது உண்மைக்கு புறம்பாக இருக்கின்றது. மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லை. ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு நிலவுகின்றதாக தெரிகின்றது. ஆனால் மருந்து தட்டுப்பாடு கிடையாது. அனைத்தும் உங்களிடம் இருக்கின்றது என கூறுகிறீர்கள்.  எங்களுக்கு காரணம் தேவையில்லை. எங்களுக்கு முடிவுகள் தான் முக்கியம். மக்கள் ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு 5 நாட்கள் ஆகின்றது. ஆனால் அரசு அதிகாரிகளுக்கு மட்டும்ஒரே நாளில் முடிவு அறிக்கை தரப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்றனர். தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories:

>