கொரோனா கோரதாண்டவம் மருத்துவமனை வளாகத்தில் குவித்து வைத்திருக்கும் சடலங்கள்

ராய்ப்பூர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள மாநிலங்களில் சட்டீஸ்கரும் ஒன்று. இங்குள்ள ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.

இறந்தவர்கள் சடலங்கள் குளிர்சாதன பிணவறையில் வைக்கப்பட்டது போக, மேலும் ஏராளமான சடலங்கள் அங்கு குவிந்துள்ளன.  இதனால், தனி அறையில் தரையில் சடலங்கள் வரிசையாக கிடத்தப்பட்ட நிலையில், அதையும் தாண்டி சடலங்கள் குவிவதால், ஸ்ட்ரெச்சரில் வைத்து சூட்டெரிக்கும் வெயிலில் வெளியிடத்திலும்  ஆங்காங்கே போடப்பட்டிருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளன.

இது குறித்து ராய்ப்பூர் தலைமை மருத்துவ அதிகாரி மீரா கூறுகையில், ‘‘இவ்வளவு மரணங்கள் நிகழும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 10-20 இறப்புகள் நிகழ்ந்த இடத்தில் ஒரே நாளில் 50-60 இறப்புகள் நிகழ்ந்தால் எவ்வாறு சமாளிப்பது? 2வது அலை அளவிட முடியாத அளவுக்கு உள்ளது. அறிகுறியற்ற நோயாளிகள் கூட வேகமாக மோசமடைந்து மாரடைப்பால் இறக்கிறார்கள்’’ என்றார். ராய்ப்பூரில் தினந்தோறும் சுமார் 55 சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கொரோனா வைரஸ் நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து எரிப்பதால் உருகும் இரும்பு கம்பிகள்

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள எரிவாயு பயன்படுத்தும் சுடுகாடுகளில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் சடலங்கள், கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து 24 மணி நேரமும் எரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் சடலங்களை வைக்கும் இரும்பு கம்பிகள் தற்போது வெப்பம் தாங்காமல் உருக தொடங்கி உள்ளன.  இதே பிரச்னை அருகில் உள்ள பார்டோலி நகரிலும் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஒரு நாளைக்கு 20 சடலங்களை மட்டுமே எரிக்கப்பட்டதால், இரும்பு கம்பிகள் ஆற கால அவகாசம் இருந்தது. ஆனால், தற்போது கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஒருநாளைக்கு 80 சடலங்கள் வரை இடைவெளியின்றி எரிக்கப்படுவதால் சடலங்களை கிடத்தும் இரும்பு கம்பிகள் உருக தொடங்கி உள்ளதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

More
>