நைட் ரைடர்சுடன் இன்று பலப்பரீட்சை நடப்பு சாம்பியனுக்கு நெருக்கடி

சென்னை: தொடக்க லீக் ஆட்டத்தில் மண்ணைக் கவ்விய நடப்பு சாம்பியன் மும்பை அணி, கடும் நெருக்கடியுடன் இன்று கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடரின் 5வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் மோதுகின்றன. ஐதராபாத் அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் கேப்டன் இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணி 2வது போட்டியில் களம் காணுகிறது. தொடக்க வீரர் நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் ஆகியோரின் கலக்கல் ஆட்டத்துடன் மார்கன், ரஸ்ஸல், கில் ஆகியோரும் ஒழுங்காக ஆடினால் இன்றும் மும்பைக்கு சங்கடம் தான். கொல்கத்தா பந்து வீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, ஹர்பஜன் நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாடுவதால் சில தடுமாற்றங்கள் இருக்கிறது.

அது இன்றைய போட்டியில் சரியாகும் என எதிர்பார்க்கலாம். முதல் ஆட்டத்தில் இறங்கிய அணியில் பெரிய மாற்றம் இருக்காது. கேகேஆர் 2வது வெற்றிக்கு குறிவைக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் நெருக்கடியுடன் களமிறங்குகிறது.

தொடரின் முதல் ஆட்டத்தில் தோற்கும் 8 ஆண்டு வரலாற்றை 9வது முறையாக இந்த ஆண்டும் நிகழ்த்தியிருக்கிறது மும்பை. ஆனால் 2வது போட்டியில் வென்ற வரலாறும் மும்பைக்கு சொந்தமாக இருக்கிறது. அதிலும் கடந்த ஆண்டு யுஏஇயில் நடந்த ஐபிஎல் தொடரில் தனது 2வது போட்டியில் கொல்கத்தவை 49 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை 2வது போட்டியில் கொல்கத்தாவுடன் மோதியுள்ளது. அந்த 3 போட்டியிலும் மும்பைதான் வென்றுள்ளது.

இந்த புள்ளி விவரம் தரும் உற்சாகம், இன்றைய போட்டியில் மும்பை அணிக்கு வெற்றி முனைப்பை கொடுக்கும். பெங்களூருக்கு எதிரான போட்டியில் முன்வரிசை வீரர்களான ரோகித், கிறிஸ் லின், சூர்யகுமார், இஷான் கிஷன் ஆகியோர் பொறுப்பாகவே விளையாடினர். அதன் பிறகு வந்த போலார்டு, பாண்டியா சகோதரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறிவிட்டனர். அதனால் நடுவரிசையில் ஏதாவது மாற்றம் இருக்கலாம். பந்து வீச்சிலும் சிறு மாற்றத்துடன் மும்பை இன்று களம் காணக் கூடும். அந்த மாற்றம் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதுவரை மோதியதில்...

இரு அணிகளும் 27 ஆட்டங்களில் மோதியுள்ளதில், மும்பை 21-6 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் மும்பை 4-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு கடைசியாக விளையாடிய போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வென்றது. அதிகபட்சமாக கொல்கத்தா 232 ரன், மும்பை 210 ரன் எடுத்துள்ளன. குறைந்தபட்சமாக மும்பை 108 ரன், கொல்கத்தா 67 ரன்னில் சுருண்டுள்ளன.

Related Stories:

>