காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் கழிவுநீர் கால்வாய்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் மாவட்ட நீதிமன்றம், கிளைச்சிறை, தீயணைப்பு நிலையம். இ-சேவை மையம், தபால் அலுவஸகம், பதிவுத்துறை அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

இந்த அலுவலகங்களுக்கு சுற்று வட்டாரப் பகுதிகளான தாமல், பாலுசெட்டி சத்திரம், ராஜகுளம், அய்யம்பேட்டை, முசரவாக்கம், விஷார், பெரும்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், தாலுகா அலுவலக நுழைவாயில் வழியாக செல்லும் கால்வாய், சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக மூடப்படாமல் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காலை மற்றும் மாலை வேலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் ஒதுங்கும்போது விபத்தில் சிக்குகின்றனர்.

இந்த நுழைவாயில் வழியாக வட்டாட்சியர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் தினமும் அலுவலகம் சென்று வருகின்றனர். ஆனாலும், அபாயகரமாக சாலையோரம் உள்ள இந்த கால்வாயை மூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன், இந்த கால்வாயை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>