×

திருப்போரூர் அருகே கரும்பாக்கம் கிராமத்தில் கொள்முதல் நிலையத்தில் நெல்லை வாங்க அதிகாரிகள் மறுப்பு: விவசாயிகள் அதிர்ச்சி

திருப்போரூர்: திருப்போரூர் அருகே கரும்பாக்கம் நெல் கொள்முதல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை வாங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையறிந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிகாரகிளின் இந்த திடீர் அறிவிப்பால், 100 ஏக்கர் நெல் தேங்கும் அபாயம்  உள்ளது. திருப்போரூர் அருகே கரும்பாக்கம் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் கரும்பாக்கம், பாலூர், பூயிலுப்பை, ராயல்பத்து, விரால்பாக்கம், முள்ளிப்பாக்கம், வளர்குன்றம், கோனேரிக்குப்பம், ரெட்டிக்குப்பம், வெங்கூர், தண்டரை, அமிர்தபள்ளம், ஒரத்தூர், பெரிய இரும்பேடு, சின்ன இரும்பேடு, மயிலை, எடர்குன்றம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 1 மாதத்தில் 650 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 80 சதவீத நெல் மூட்டைகள் எடுத்துச் செல்லப்பட்டன. மீதம் உள்ள நெல்லை சுத்தப்படுத்தி மூட்டை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இதற்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்படாது என வேளாண் துறை அறிவித்து விட்டது. இதனால் இப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து அறுவடைக்காக காத்து கொண்டிருக்கும் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நெல்லை சுத்தப்படுத்தும் இயந்திரத்தை எடுத்து செல்ல வந்த அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர். தற்போது நெல் கொள்முதல் நிலையத்தில் 1000 மூட்டை நெல் விற்பனைக்காக காத்திருப்பதாகவும், மேலும் 100 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்காக இருப்பதாகவும் திடீரென நெல் கொள்முதலை நிறுத்தினால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட வேளாண் அலுவலகம் மற்றும் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் கரும்பாக்கம் விவசாயிகள் சங்கம், நேரடி நெல் கொள்முதல் நிலையக்குழு உறுப்பினர்கள் உள்பட பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிப்பதாக உறுதியளித்தார்.



Tags : Karumbakkam ,Thiruporur , fficials refuse to buy paddy at a procurement center in Karumbakkam village near Thiruporur: Farmers shocked
× RELATED திருப்போரூர் அருகே துப்பாக்கிகள்...