தெலுங்கு வருடப் பிறப்பு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்: தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு, கன்னடம், மராத்தி, சிந்தி மொழி பேசும் மக்களுக்கு அவர்கள் கொண்டாடும் யுகாதி, குடிபடுவா, செட்டி சன்ட் தினத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான நாளில் நமது பாரம்பரியம், கலாச்சாரத்தை மேம்படுத்தி நாட்டின் வளத்தை பெருக்க தீர்மானிப்போம். தமிழிசை சவுந்தரராஜன் (தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர்): மனதளவில் ஒன்றுபட்டு நம் நாட்டின் ஆரோக்கியத்திற்காக கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இந்த யுகாதியை கொண்டாடுவோம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: புத்தாண்டு திருநாளாம் `யுகாதி’ திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாமக நிறுவனர் ராமதாஸ்: தெலுங்கு, கன்னட புத்தாண்டான உகாதி திருநாளைக் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): சாதி, மத, துவேஷம் நீங்கி, விரைவில் தமிழகத்தில் மக்கள் நலன்சார்ந்த மொழி சிறுபான்மையினரை பாதுகாக்கிற நல்லாட்சி அமைய இருக்கிறது. தமிழகத்தில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): உகாதி என்ற சொல்லுக்கு புதிய யுகத்தின் ஆரம்பம் என்று அர்த்தம். திருநாவுக்கரசர் (காங்கிரஸ் மூத்த தலைவர்): தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுகிற மக்களுக்கு யுகாதி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி தலைவர்): மொழியால் வேறுபட்டாலும் ஆந்திர மாநிலத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே கலாச்சார ரீதியாக நெருங்கிய உறவு உள்ளது. அத்தகைய சிறப்பு மிக்க தெலுங்கு இன மக்களின் புத்தாண்டு தினமான ‘யுகாதி’ நன்நாளில் அன்பான நல்வாழ்த்துகள்.

Related Stories:

>