சென்னையில் நோய் தொற்று அதிகரிப்பு காரணமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டு படுக்கைகள் நிரம்பின: தனியார் மருத்துவமனைகளிலும் நிலவும் தட்டுப்பாடு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டு படுக்கைகள் நிரம்பியது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில் 2 பேர் மட்டுமே சிகிச்சை முடிந்து வீடு திரும்புகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா நோய் தொற்றுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் தொடர்ந்து நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து கொண்டே உள்ளது. அங்குள்ள 500 படுக்கைகளில் 490க்கும் மேற்பட்ட படுக்கைகளில் நோயாளிகள் உள்ளனர். அதைப்போன்று அரசு மருத்துவமனைகளான ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் அங்கு படுக்கைகளும் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அனைத்து தரப்பினரையும் அச்சுறுத்தி வரும் நிலையில், வசதி படைத்தவர்கள் பலருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்திய ‘வார்டுகளில்’ நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவமனைகளில் படுக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் கொரோனா தொற்று தனது உச்சத்தை தொட்டிருந்தது. படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய நேரத்தில் அரசு தரப்பில் கல்லூரிகள், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் உள்ளிட்டவைகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு, லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது அதைப்போல் கல்லூரி விடுதிகள், அரசு கட்டிடங்களை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் படுக்கைகள் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* எந்த மருத்துவமனையில் எவ்வளவு நோயாளிகள்?

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள 1,650 படுக்கைகளில் 700 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 450 படுக்கைகளில் 280 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 1,200 படுக்கைகளில் 425 பேர், ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனையில் 575 படுக்கைகளில் 550 பேர், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் 500 படுக்கைகளில் 485 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதன்படி 4,375 படுக்கைகளில் இதுவரை 1,935 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>