காஞ்சிபுரம் அருகே பரபரப்பு வழக்கறிஞர் ஓடஓட வெட்டிக்கொலை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

சென்னை: காஞ்சிபுரம் அடுத்த காரை கிராமத்தை சேர்ந்தவர் அழகரசன்(40). வழக்கறிஞர். இவரது மனைவி சத்யாவதி(35). இவர்களுக்கு 12 மற்றும் 9 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை அழகரசன் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி காரை கிராமத்துக்கு செல்லும் வழியில் நண்பர் சங்கர் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென அழகரசனை தாக்க முயன்றனர். இதை கண்டு சுதாரித்து கொண்ட அவர், அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் மர்ம நபர்கள், அவரை விரட்டி சென்று பயங்கர ஆயுதங்களால் தலை, கை, கால்களில் சரமாரியாக வெட்டினர்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அழகரசன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். மேலும், அவருடன் இருந்த நண்பர் சங்கர் அவர்களை தடுத்தபோது அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், படுகாயமடைந்த சங்கர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கம்பெனியில் ஸ்கிராப் எடுப்பதில் ஏற்பட்ட தொழில்போட்டியில்  அழகரசன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>