தண்டவாளத்தில் கல் வைத்த போதை ஆசாமி பிடிபட்டார்

பெரம்பூர்: சென்னை புறநகர் ரயில் பாதையில் அடிக்கடி போதை ஆசாமிகள் மது அருந்திவிட்டும், கஞ்சா போதையிலும் ரயில்வே தண்டவாளங்களில் கல்லை போட்டு விட்டு செல்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரம்பூரில் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது மீண்டும் வில்லிவாக்கம் பகுதிகளில் மர்ம ஆசாமிகள் இதுபோன்ற நாசவேலையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடந்த மாதம் 23ம் தேதி கொரட்டூர் பகுதியில் தண்டவாளத்தில் கல்லை போட்டு விட்டு சென்றுள்ளனர். இதேபோல் கடந்த மாதம் 28ம் தேதி கொரட்டூரில் இருந்து வில்லிவாக்கம் வரும் வழியில் சமூக விரோதிகள் கல்லை  போட்டுவிட்டு சென்றுள்ளனர். மின்சார ரயிலை இயக்கிய ஓட்டுநர் இதைப் பார்த்து மின்சார ரயிலை நிறுத்தி கல்லை எடுத்துப் போட்டுவிட்டு இதுகுறித்து பெரம்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் பெரம்பூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், பட்ரவாக்கம் மேனாம்பேடு பகுதியை சேர்ந்த கார்த்திக்(20) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் கஞ்சா போதையில் தண்டவாளத்தில் கல்லை போட்டதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பெரம்பூர் ரயில்வே போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த நாச வேலையில் ஈடுபட்ட வெங்கடேசன் மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>