×

நாகை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா வார்டில் மூதாட்டி சாவு: டாக்டர்கள் குழு விசாரணை

நாகை: நாகை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா வார்டில் மூதாட்டி இறந்தது குறித்து டாக்டர்கள் குழு விசாரணை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தினமும் 2000-க்கு அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகின்றனர். மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கணக்கில் தொற்று ஏற்பட்டு வருகிறது. நாகை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகூர் குயவர் தெருவை சேர்ந்த 63 வயது மூதாட்டி கடந்த 2ம் தேதி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு மூதாட்டிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக டாக்டர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதன்பின், டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி சிறிது நேரத்தில் இறந்தார். அருகில் இருந்தவர்கள், ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் மூதாட்டி உயிரிழந்தார். இரவு வரை உடல்நிலை சீராக இருந்த நிலையில், மூதாட்டிக்கு மூச்சுதிணறல் ஏற்பட ஆக்சிஜன் பற்றாக்குறைதான் காரணம். அருகில் உள்ள படுக்கையில் கொரோனா சிகிச்சை பெற்றவர்களுக்கும் மூச்சுதிணறல் ஏற்பட்டது. எனவே, ஆக்சிஜன் பற்றாக்குறையால் தான் மூதாட்டி இறந்ததாக டாக்டர்களிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மருத்துவ கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறுகையில், ‘நாகை அரசு ஆஸ்பத்திரியில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது. இறந்த மூதாட்டிக்கு பரிசோதனை செய்தபோது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. அதனால் சிகிச்சை பலனின்றி மூச்சு திணறல் ஏற்பட்டு இருந்துள்ளார்’ என்றார். கலெக்டர் பிரவீன் பி நாயர் கூறும்போது, ‘நாகை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற மூதாட்டி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் மூதாட்டி இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் ஏதும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். கலெக்டர் தலைமையில் டாக்டர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் இறுதியில், சிகிச்சையில் தவறு ஏற்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Corona ,Naga Government Hospital , Grandmother dies in Corona ward due to lack of oxygen at Naga Government Hospital: Doctors team inquires
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...