மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். மாதம் தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் தமிழகம் மட்டுமின்றி புதுவை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபடுவார்கள். அமாவாசை நள்ளிரவு ஊஞ்சல் உற்சவத்தில் கோயிலின் வடக்குவாசல் எதிரே உள்ள ஊஞ்சல் மேடையில் அலங்கரிக்கப்பட்ட அம்மனை அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடி பக்தர்கள் மெய்மறந்து அம்மனை தரிசித்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடமாக ஊஞ்சல் உற்சவம், கோயில் உட்பிரகாரத்தில் எளிமையாக பக்தர்களின்றி நடைபெற்று வந்தது. ஆனால் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா 2ம் அலை தீவிரமானதால் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முககவசம், சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமாவாசையையொட்டி நேற்று மாலை அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றாமல் பக்தர்கள் முககவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் குவிந்தனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால், அமாவாசை தினத்தில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.