கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து 3 தடுப்பூசி: ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் மக்களுக்கு பல கட்டங்களாக போடப்பட்டு வருகின்றன. உலகளவில் தினசரி டோஸ்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ஒரு நாளைக்கு  சராசரியாக 38,34,574 டோஸ்களுடன் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியானது ரஷியன் நேரடி முதலீட்டு நிதி (ஆர்டிஐஎஃப்) அமைப்புடன் சேர்ந்து ஐதராபாத்தை தளமாகக் கொண்ட டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள், ஹெட்டிரோ பயோபார்மா, கிளாண்ட் பார்மா, ஸ்டெலிஸ் பயோபார்மா மற்றும் விச்ரோ பயோடெக் உள்ளிட்ட பல இந்திய மருந்து நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பூசியை தயாரிக்க உள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியானது 850 மில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஸ்புட்னிக் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து 3வது தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2 தடுப்பூசிக்கு வாய்ப்பு:

இதற்கிடையே, அனைத்து பரிசோதனை நடைமுறைகள் மற்றும் அங்கீகாரம் ஆகியன சரியான நேரத்தில் நடைபெறும்பட்சத்தில் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஜான்சன் மற்றும் ஜான்சன் (பயோ இ) தடுப்பூசியும், காடில்லா சைடஸ் தடுப்பூசியும் கிடைக்கும். செப்டம்பர் மாதத்திற்குள் நோவாவெக்ஸ் (சீரம்) மற்றும் அக்டோபர் மாதத்திற்குள் நாசி தடுப்பூசி ஆகியவை கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories:

>