வெற்றியுடன் தொடங்கியது மகிழ்ச்சி: ராணா-திரிபாதி அற்புதமாக பேட்டிங் செய்தனர்..! கொல்கத்தா கேப்டன் மோர்கன் பாராட்டு

சென்னை: 14வது ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த 3வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் நிதிஷ் ராணா 56 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 80 ரன் விளாசினார். ராகுல் திரிபாதி 29 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 22 (9பந்து), கேப்டன் மோர்கன் 2, கில் 15, ரஸ்சல் 5 ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஐதராபாத் தரப்பில் ரஷித்கான், நபி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து களம் இறங்கிய ஐதராபாத் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களே எடுத்தது. இதனால் 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மணிஷ் பாண்டே நாட்அவுட்டாக 61 ரன் (44 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), பேர்ஸ்டோவ் 55 (40 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) ரன் எடுத்தனர்.

வார்னர் 3, சகா 7, முகமது நபி 14, விஜய்சங்கர் 11 ரன்னில் வெளியேறினர். அப்துல் சமத் 8 பந்தில் 2 சிக்சருடன் 19 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கொல்கத்தா தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2, ஷாகிப் அல்ஹசன், பேட் கம்மின்ஸ், ரஸ்சல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். நிதிஷ் ராணா ஆட்டநாயகன் விருது பெற்றார். கொல்கத்தா அடுத்ததாக நாளை மும்பை இந்தியன்சுடனும், ஐதராபாத் 14ம்தேதி பெங்களூருரையும் எதிர்கொள்கிறது. வெற்றிக்கு பின் கொல்கத்தா கேப்டன் மோர்கன் கூறுகையில், வெற்றியுடன் தொடங்கியது மகிழ்ச்சி. நிதிஷ், திரிபாதி அற்புதமாக பேட்டிங் செய்தனர். மேலும் பந்துவீச்சிலும் தொடக்கத்தில் சிறப்பாக அமைந்தது.

எங்களுக்கு ஒரு சிறந்த தலைமை பயிற்சியாளர் (மெக்கல்லம்) மற்றும் ஆதரவு ஊழியர்கள் கிடைத்துள்ளனர். அணியில் இருந்து சிறந்ததைப் பெறுவதே முக்கிய வேலை. ஹர்பஜன் முதல் ஓவரில் நன்றாகத் தொடங்கி பின்னர் பங்கை வகிக்கவில்லை. ஆனால் தனது அனுபவத்தைப் பயன்படுத்தி மற்ற வீரர்களுக்கு உதவியது தன்னலமற்ற தன்மையைக் காட்டுகிறது. இது வெளிப்படையாக ஒரு நீண்ட போட்டி. மதிப்பெண்களால் (புள்ளி) நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம், என்றார். தோல்விக்கு பின் டேவிட் வார்னர் கூறியதாவது: இந்த பிட்ச்சில் இது அடிக்க கூடிய இலக்கு தான். நாங்கள் ஆரம்பத்திலேயே 2 விக்கெட் இழந்த நிலையில் மணிஷ், பேர்ஸ்டோவ் கடுமையாக போராடிய விதம் நன்றாக இருந்தது. இதனால் எங்களுக்கு வாய்ப்புகள் இருந்தன. பனி ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியது. முதல் போட்டியில் வெற்றி பெற விரும்பினோம். ஆனால் இங்கு இன்னும் 4 ஆட்டம் உள்ளது. அதில் வெற்றிபெற முயல்வோம், என்றார்.

Related Stories:

>