×

மும்பையில் ராஜஸ்தான்-பஞ்சாப் இன்று மோதல்..!

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 4வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த சீசனில் கடைசி இடத்தை பிடித்த ராஜஸ்தான் அணி புதிய கேப்டன் சஞ்சு சாம்சனுடன் களம் இறங்குகிறது. பேட்டிங்கில் ஜோஸ் பட்லர், ஸ்டோக்ஸ், டேவிட் மில்லர் என அதிரடி வீரர்கள் உள்ளனர். வேகத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் மிரட்டுவார். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச தொகைக்கு (16.25கோடி) ஏலம் எடுக்கப்பட்டுள்ள ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரீஸ், ஷிவம்துபே, கடந்த சீசனில் அசத்திய ராகுல் திவாதியா ஆகியோரும் வலு சேர்க்கலாம். மறுபுறம் கே.எல்.ராகுல் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் என பெயர் மாற்றத்துடன் களம் காண்கிறது.

பேட்டிங் வரிசையில் மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரன் ஆகியோருடன் தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக்கான் இணைந்துள்ளார். ரூ.5.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர் அதிரடியில் மிரட்டுவார். பந்து வீச்சில்,முகமது ஷமி, கிறிஸ் ஜோர்டன், முருகன் அஸ்வின் உள்ளிட்டோர் உள்ளனர். கடந்த சீசனில் 6வது இடத்தை பிடித்த நிலையில் இந்த முறை பல மாற்றங்களுடன் களம் காண்கிறது. இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறக்கும். இரு அணிகளும் இதுவரை 21 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 12ல் ராஜஸ்தான், 9ல் பஞ்சாப் வென்றுள்ளன. கடந்த சீசனில் மோதிய 2 போட்டியிலும் ராஜஸ்தான் தான் வென்றது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தானின் அதிக ரன் 226, பஞ்சாப் 223ரன். குறைந்த ரன் பஞ்சாப் 124, ராஜஸ்தான் 112.

Tags : Rajasthan ,Punjab ,Mumbai , Rajasthan-Punjab clash in Mumbai today ..!
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்