கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்

சென்னை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், சினிமா பிரபலங்களும், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெரும்பாலனவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், 2  டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கொரோனா அறிகுறி ஏற்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது.

இதனை தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ரேலா மருத்துவமனை நிர்வாகம் துரைமுருகனின் உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்; கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது. மேலும், கவலைப்படும்படி அவரது உடல்நிலை இல்லை எனவும், மருத்துவக்குழு அவருடைய இதயத்துடிப்பு மற்றும் நாடித்துடிப்பு உள்ளிட்ட அனைத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>