×

சித்திரை விஷூவையொட்டி வாழைத்தார்களின் விலை கிடுகிடு உயர்வு: இலை விலையும் எகிறியது

பொள்ளாச்சி: சித்திரை விஷூவையொட்டி பொள்ளாச்சி மார்க்கெட்டில் நேற்று வாழைத்தார் வரத்து அதிகரித்திருந்தது. ஆனாலும் விலை உயர்வாக காணப்பட்டது. இதில் செவ்வாழைத்தார் ஒன்று ரூ.1300வரை ஏலம் போனது. வாழை இலைக்கட்டு விலையும் எகிறியது.  பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் மற்றும் தேர்நிலை மார்க்கெட் பகுதியில், வாரத்தில் புதன் மற்றும்  ஞயிற்றுக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடக்கிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் தூத்துக்குடி, திருச்சி பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் வாழைத்தார் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

   இந்நிலையில் வரும் 14ம் தேதி புதன்கிழமை தமிழ்புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடக்கும். இதற்காக மா, பலா, வாழை,  உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளை வைத்து கனி காணும் நிகழ்ச்சி நடத்துவர். சித்திரை விஷூவையொட்டி பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்தாலும், அவை கூடுதல் விலை நிர்ணயித்து ஏலம்விடப்பட்டது. கடந்த வாரம் ரூ.1050க்கு விற்பனையான செவ்வாழைத்தார் ஒன்று, நேற்று ரூ.800 முதல் ரூ.1300வரையிலும். ரூ.550க்கு விலைபோன பூவன் தார் ரூ.750க்கும் ஏலம்போனது. சாம்ராணி ரூ.600க்கும், மோரீஸ் ரூ.550க்கும் என கூடுதல் விலைக்கு ஏலம் போனது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதுபோல், தேர்நிலையில் உள்ள மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளியூர்களில் இருந்து வாழை இலைக்கட்டுகள் வரத்து குறைவாக இருந்தாலும், கடந்த சில வாரமாக சுபமுகூர்த்த நாட்கள் உள்ளிட்ட விஷேச தினங்கள் இல்லாததால் இலைக் கட்டுகள் அதிகபட்சமாக ரூ.500வரை என குறைந்த விலைக்கு போனது. இதில் நேற்று நடந்த சந்தை நாளின்போது மார்க்கெட்டுக்கு வாழை இலை வரத்து குறைவாக இருந்தாலும், வரும் 14ம் தேதி சித்திரை விஷூ என்பதால், வாழை இலை கட்டுகளை வாங்க வந்த வியாபாரிகள் அதிகளவில் இருந்தனர். இதனால், விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றது. இதில் 100எண்ணம் கொண்ட ஒரு கட்டு வாழை இலை ரூ.800 முதல் அதிக பட்சமாக ரூ.1300வரை என கூடுதல் விலைக்கு போனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.



Tags : On the eve of Chittirai Vishu Banana prices skyrocket: Leaf prices soar
× RELATED கோடை காலத்தையொட்டி மோர் விற்பனை 25% அதிகரிப்பு: ஆவின் நிர்வாகம் தகவல்