×

எழுமலை அருகே ஒரு வாரமாக வீணாகும் கூட்டுக்குடிநீர்: 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு

உசிலம்பட்டி: எழுமலை அருகே குழாய் உடைந்து ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், எழுமலை அருகேயுள்ளது இ.கோட்டைப்பட்டி. இந்த ஊரில் எழுமலை-உசிலம்பட்டி சாலையோரத்தில் வைகை அணை ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுகுடிநீர் திட்டத்தில் வரக்கூடிய குடிநீர்குழாய் கேட் வாழ்வு உடைந்து கடந்த ஒருவாரமாக தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது. இதனை கடந்த 2 தினங்களுக்கு முன்பு சம்மந்தப்பட்ட ஊழியர்கள் சரிசெய்ய முயற்சி செய்து முடியாமல் சென்றுவிட்டனர். இதனால் இந்த குடிநீர் இ.கோட்டைப்பட்டி குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த குடிநீர் வெளியாகும் பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளிப்பதும், இதனால் மேற்புறத்திலுள்ள அசுத்தங்கள் தண்ணீர் கொப்பளிக்கும்போது உள்ளே இழுத்துசென்று மாசுபடுகிறது.

இந்த அசுத்தமான குடிநீரே உத்தப்புரம், எழுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகள், சீல்நாயக்கன்பட்டி, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், எம்.கல்லுப்பட்டி, துள்ளுக்குட்டிநாயக்கனூர், டி.கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு சப்ளையாகிறது. இதனால் இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. மக்கள் கூறுகையில், ‘‘இ.கோட்டைப்பட்டியில் குடிதண்ணீர் கேட் வாழ்வு உடைந்து அதிகமான குடிதண்ணீர் விரயமாகிறது. இங்கு அசுத்தமாகும் குடிநீரை பொதுமக்களுக்கு  சப்ளை செய்வதால், சளி, காய்ச்சல், உள்ளிட்ட தொற்றுநோய்கள் எழுமலை பகுதியில் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் சளி, காய்ச்சல் ஏற்படுவதால் கொரோனாவாக இருக்குமோ என பீதியடைய வேண்டியுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மதுரை கோட்டப்பொறியாளர் உடனடியாக இப்பகுதியில் கேட் வாழ்வு உடைப்பை சரி செய்ய வேண்டும். சுத்தமான குடிதண்ணீர் வழங்கி பொதுமக்களை தொற்று நோயிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

Tags : Ezhumalay , A week of wasted drinking water near Ezhumalai: More than 20 villages affected
× RELATED எழுமலையில் ஆள் விழுங்கும் கிணற்றால்...