×

கொலம்பியாவை மிரட்டும் நீர்யானைகள்!

கொலம்பியாவின் வரலாற்றை அறிந்தவர்கள் போதை மருந்து கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார் பற்றி அறிந்திருப்பார்கள். 1980களில் ஹசியண்டா நாபொலிஸில் எஸ்கொபார் ஒரு தனியார்  வனவிலங்குக் காட்சியகத்தை உருவாக்கியிருக்கிறார். 1993ல் எஸ்கொபார் இறந்தபின்னர், அந்த வனவிலங்குக் காட்சியகத்தில் இருந்த மற்ற விலங்குகள் எல்லாம் அருகிலிருந்த அரசு வனவிலங்குக் காட்சியகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஆனால், நீர்யானைகளை இடம்பெயர்ப்பது அதிகம் செலவு பிடிக்கும் என்பதால் நான்கு நீர்யானைகளும் அந்த வளாகத்திலேயே அனாதரவாக விடப்பட்டன.
2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இவை வளாகத்திலிருந்து வெளியேறி, அருகிலிருந்த மாக்டலேனா சதுப்புநிலப் பகுதிக்கு சென்றுவிட்டன. வெறும் நான்கு நீர்யானைகளாக இருந்த இவை விடாமுயற்சியோடு இனப்பெருக்கம் செய்து கடந்த ஆண்டு எண்பதாக உயர்ந்திருக்கின்றன.

2035க்குள் இது 1500 ஆக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவின் இயற்கைச் சூழலில் இல்லாத விலங்கு இது என்பதால் ஆற்றுநீரின் வேதியியல் கட்டமைப்பு,  உயிர்ச்சத்துக்கள், ஆக்ஸிஜன் அளவு, நுண்பாசிகளின் சூழல் ஆகியவற்றை மாற்றியமைப்பது, கொலம்பியாவின் நாட்டு இனங்களான வனவிலங்குகளை அழிப்பது, மீன்வளத்தைக் குறைப்பது என்று இந்த நீர்யானைகளால் ஏற்படும் சூழல்சீர்கேடுகள் பல. அடிக்கடி மக்களையும் தாக்குகின்றன. இவற்றுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா என தற்போது சூழலியல் ஆய்வறிஞர்கள் பரிசீலித்து வருகிறார்கள்.

- இளங்கோ

Tags : Colombia , கொலம்பியா
× RELATED அமெரிக்க அதிபர் தேர்தல்; கட்சி...