ஊசூர் அடுத்த குருமலையில் 4 ஆண்டுகளாக கிணற்றில் ஆபத்தான நிலையில் குடிநீர் எடுத்து செல்லும் மலைவாழ் பெண்கள்: உடைந்த பைப் லைன்கள் சீரமைக்க கோரிக்கை

அணைக்கட்டு: ஊசூர் அடுத்த குருமலையில் உடைந்த பைப் லைன்களை சீரமைக்காததால் 4 ஆண்டுகளாக கிணற்றின்மேல் ஏறி ஆபத்தான நிலையில் குடிநீரை பெண்கள் எடுத்து செல்லும் அவல நிலை உள்ளது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா வேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்தியூர் ஊராட்சி ஊசூர் அடுத்த குருமலை பகுதியில் குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல்மலை உள்ளிட்ட மூன்று கிராமங்கள் உள்ளன. இதில் குருமலை கிராமத்தில்  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் தேவைக்காக கடந்த பல ஆண்டுகளுக்களுக்கு முன்பு அரசு நடுநிலை பள்ளி அருகே அவர்களே ஒரு கிணறு வெட்டி அதிலிருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

ராட்டினம் உள்ளிட்டவைகள் மூலம் கிணற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுத்து சிரமப்பட்டு வந்ததால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் அதே பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேல்நிலை நீர்தேக்கதொட்டி கட்டி பைப் லைன்கள் பொருத்தி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் மலைவாழ் மக்கள் சிரமமின்றி குடிநீர் எடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சியின் போது அந்த கிணற்றில் நீர் குறைந்ததால், டேங்க் மூலம் நீர் ஏற்றி வழங்குவது நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கனமழை மற்றும் ஆண்டு கடைசியில் பெய்து வரும் கனமழை காரணமாக தண்ணீர் அதிகளவில் கிணற்றில் உள்ளது.

எனவே மீண்டும் பழையபடி மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றி குடிநீர் வழங்க வேண்டும் என மலை கிராம மக்கள் சார்பில் பிடிஓக்கள், ஊராட்சி செயலாளரிடம் 4 ஆண்டுகளாக பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதில் கடந்த ஜனவரி மாதம் ஊசூரில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மக்கள் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் இரும்பு கம்பியால் மூடப்பட்டுள்ள திறந்த கிணற்றின் மேல் ஏறி நின்று வாளிகள், குடங்கள் மூலம் தண்ணீரை சேந்தி எடுத்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாததால் அதிலிருக்கும் மோட்டார், இணைப்பு பைப் லைன்கள், குடிநீர் குழாய்கள், வீடுகளுக்கு செல்லும் குழாய் இணைப்பு பைப் லைன்கள் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, கிணற்றில் போதுமான அளவிற்கு தண்ணீர் இருந்தும் அதனை முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் அலட்சியமாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மோட்டார், பைப் லைன்களை சரிசெய்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் முறையாக மீண்டும் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் குருமலை மலைகிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

More
>